2. வருமானம்.
‘என்ன சொல்லுங்க… பையனுக்கு நல்ல வேலை இல்லை.. நிலையான வருமானம் இல்லாத ஒருத்தருக்கு எப்படிங்க கல்யாணம் பண்ணி வைக்கிறது…?’
அடிக்கடி நாம் கேட்டுப் பழக்கப் பட்ட வசனம்தான்.
உலகம் மொத்தமும் பணத்தை மையமாகக் கொண்டுதான் இயங்கு கிறது – நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும். யாருக்கு அதிக வருமானம் இருக்கிறதோ… அவருக்குத்தான் அதிக மரியாதை… ஏன்.., முதல் மரியாதையே.
இந்த ‘வருமானம்’ என்னவாக இருக்கலாம்…? எந்தெந்த வகைகளில் எல்லாம் ஒருவருக்கு வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது…? எல்லாவற்றையும் ஆழமாகப் பரிசீலித்து, விளக்குகிறது வருமான வரிச் சட்டம்.
1962 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த்தது தற்போது இந்தியா முழுதிலும் நடைமுறையில் உள்ள
‘வருமான வரிச் சட்டம் 1961’. (பிரிவு – 1)
இச்சட்டத்தில் பயன் படுத்தப் படும் பல்வேறு சொற்களுக்கும் அர்த்தம் சொல்கிறது; விளக்கம் அளிக்கிறது – பிரிவு 2. 48 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது இப்பிரிவு.
இதில், பிரிவு 2 (24) ‘வருமானம்’ என்கிற சொல்லுக்கு, விளக்கம் அளிக்கிறது. இதன்படி, வருமானத்தை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.
1) சம்பளம் (salary)
2) வாடகை வருமானம் (income from house property)
3) மூலதன ஆதாயம் (capital gains) (வேறு ஒன்றும் இல்லை; ஏதாவது சொத்து விற்பதால் கிடைக்கிற லாபம்)
4) தொழில் அல்லது வியாபாரம் மூலம் கிட்டும் வருமானம். அது என்ன… ‘தொழில்’ தனியே; ‘வியாபாரம்’ தனியே…?
வழக்கறிஞர், மருத்துவர் ஆகியோர், தொழில் புரிவோர். இதில், வாங்குகிற, விற்கிற வேலை எல்லாம் இல்லை.
இதுவே ஒரு கடை நடத்துவதானால்..? கொள்முதல், விற்பனை, சரக்கு கையிருப்பு எல்லாம் இருக்கும்தானே…?
முன்னது – தொழில்; பின்னது – வியாபாரம்.
5) குதிரைப் பந்தயம்; லாட்டரி சீட்டு போன்ற வழிகளில் கிடைக்கும் வருமானம்.
6) பிற வகைகளில் கிட்டும் வருமானம். (income from other sources) அதாவது வங்கியில் வைப்புத் தொகை இருந்து அதற்கு வட்டி கிடைத்தால்; நிறுவனங்களில் பங்குகள் வாங்கி (shares) அதில் இருந்து ‘டிவிடெண்ட்’ வந்தால்; இவை எல்லாம், ‘பிற வகை வருமானம்’ ஆகும்.
எந்த வகையில் ஒருவருக்கு வருமானம் வந்தாலும் அதை மேற்சொன்ன ஆறு தலைப்புகளில் ஒன்றின் கீழ் கொண்டு வந்து விடலாம். ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஓய்வூதியம் (‘பென்ஷன்’) வருகிறது; பணியில் இருந்து நீக்கப் படுகிறார்; நஷ்ட ஈடு கிடைக்கிறது; பணியில் வெளியூருக்குச் செல்கிறார், பயணப் படி (travelling allowance) தருகிறார்கள்… இவை எல்லாம் ‘சம்பளம்; என்கிற தலைப்பின் கீழ் சேர்த்துக் கொள்ளப் படும்.
நிலம், வீடு, கடை, கிடங்கு (godown) ஆகியவற்றில் எதை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விற்றாலும் ‘வாடகை வருமானம்’. ஆனால் ‘கார்’ லாரி’ போன்றவற்றை வாடகைகு விட்டால், அது ‘வியாபாரம்’ மூலம் கிட்டும் வருமானம்.
அசையும் அசையா சொத்துகளை விற்பதால் கிடைக்கும் லாபம் – மூலதன ஆதாயம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருக்கிற அசையா சொத்துகள்; ஓர் ஆண்டுக்கு மேல் வைத்து இருக்கிற அசையும் சொத்துகளை விற்பதால் கிடைக்கிற லாபம் – ‘நீண்ட கால மூலதன ஆதாயம்’ (long time capital gains)
இந்தக் காலத்துக்கும் முன்பாக விற்றால் கிடைப்பது, குறுகிய கால மூலதன ஆதாயம். (short time capital gains) நீண்ட கால, குறுகிய கால ஆதாயத்துக்கு, வெவ்வேறான வரி விகிதம். ஆகவே இந்த வேறுபாடு முக்கியம் ஆகிறது.
மற்ற பிற வகை வருமானத்தில் உள்ள நுணுக்கங்களைப் பிறகு பார்க்கலாம். வருமானத்தில் வகைகள் இருப்பது போலவே, வரி செலுத்துவோரிலும்
தனி நபர் (individual)
இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family)
கூட்டு வியாபரம் (partnership firm)
நிறுவனம் (company)
அறக் கட்டளை (trust) என்று பல வகையினர் உண்டு.
முன்னர் சொன்னது போலவே இங்கும், வரி விகிதம் ஒவ்வொரு வகைப் பிரிவினருக்கும் மாறுபடும்.
போகப் போக இது குறித்து விரிவாகப் பார்க்கத்தான் போகிறோம். இப்போதைக்கு இது போதும். அடுத்ததாக – ‘நிதி ஆண்டு’.
பொதுவாக ஆண்டுத் தொடக்கம் என்றால் ஜனவரி 1 தான் நமக்கு நினைவு வரும். ஜனவரி தொடங்கி டிசம்பர் முடிவது – ‘காலண்டர் ஆண்டு’. வேறு சில ஆண்டுகளும் உண்டு. அநேகமாக, ஜூன் / ஜூலை தொடங்கி ஏப்ரல் / மே மாதம் முடிகிறது – ‘கல்வி ஆண்டு’. ஏப்ரல் 1 தொடங்கி மார்ச் 31 முடிகிறது – ‘நிதி ஆண்டு’.
‘தமிழ் ஆண்டு’ திருவள்ளுவர் ஆண்டு’ ‘சக’ ஆண்டு; ‘ஹிஜ்ரி’ ஆண்டு, கணக்கு ஆண்டு (accounting year)…… என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். பயன்படுத்தியும் வருகிறோம்.
வருமான வரியைப் பொறுத்த மட்டில் ‘நிதி ஆண்டு’ தான் எல்லாவற்றுக்கும். நிதி ஆண்டை ஒட்டி அடுத்து வருவது ‘மதிப்பீட்டு ஆண்டு’ (assessment year) இது குறித்தும் நாம் விரிவாகக் காண இருக்கிறோம். இவை எல்லாம் இருக்கட்டும்.
உடனடியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது…….
(தொடர்வோம்)