சென்னை,

லைநகர் டில்லியில் கடந்த 17 நாட்களாக அரை நிர்வாணமாக  போராடி வரும் தமிழக விவசாயி களை சந்திக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை  டில்லி செல்ல இருக்கிறார்.

விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 17 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சாலையில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்திற்கு பாமக, திமுக, அதிமுக, மதிமுக போன்ற அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டில்லி சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை அழைத்துக்கொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.

டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வெளி மாநில விவசாயிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முதல் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராடும் விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை டில்லி செல்கிறார்.  அங்கு ஜந்தர் மந்திரி பகுதியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க இருக்கிறார்.

போராடும் விவசாயிகள்  மத்திய அமைச்சர்களை இரண்டு முறை  சந்தித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.