சென்னை:

ன்று முதல் தமிழகம் உள்பட 6 மாநில லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டிரைக் காரணமாக 18 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ், இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவல கங்களில் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தென்மாநில லாரி உரிமை யாளர் சம்மேளனம் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விதிப்பு குறித்து எந்தவித பேச்சு வார்த்தைக்கும் உடன்படவில்லை என கூறப்படுகிறது.

அதன் காரணமாக  திட்டமிட்டபடி இன்று காலை முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் தொடங்கியிருக்கும்  போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா கூறியுள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும்,  தினசரி 5 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.