டில்லி,
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது, மாநில அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

மது காரணமாக ஆண்டுக்கு  5 லட்சம் விபத்துகள் நடைபெறுகிறது என்று தொடரப்பபட்ட பொது நல வழக்கு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கு  காரணமாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் அதிரடி கருத்துக்களை கூறியிருந்தது.

ஆனால்,  நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து,   பஞ்சாப், அரியானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ் வரராவ் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து  தீர்ப்பு கூறியது.

அதில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வருகிற மார்ச் 31–ந்தேதிக்குள் மூட வேண்டும்.

அவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள உரிமத்தை மார்ச் 31–ந்தேதிக்குப்பின் நீட்டிக்கக்கூடாது.

தற்போது இருக்கும் உரிம காலம் வரை மட்டுமே இந்த மதுக்கடைகள் செயல்பட வேண்டும்.

புதிய கடைகளுக்கு உரிமம் எதுவும் வழங்கக்கூடாது.

நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும்.

500 மீட்டருக்கு அப்பால் உள்ள மதுக்கடைகளுக்கு செல்லவும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தனியாக வழி அமைக்கக்கூடாது.

அதுபோல், நெடுஞ்சாலைகளில் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அருகில் உள்ள மதுக்கடைகள் தொடர்பாக வைக்கப்பட்டு இருக்கும் விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை அகற்ற வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500 மீ-ல் இருந்து 100 மீ-ஆக குறைக்க வேண்டும் என்று கோரினார்.

உச்சநீதி மன்றத்தின் உத்தரவு காரணமாக  தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்,   மது விற்பனை, வரி மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் ரூ.25,500 கோடி வருமானம் கிடைப்பதாகவும், உச்சநீதி மன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டால், தமிழகத்தின் வருமானம் பாதிக்கும் என்றும் வாதிட்டது.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும், மதுக்கடைகளை மட்டுமே நம்பியிருக்க கூடாது என்றும்,

மாநில அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா?  என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.