லக்னோ,
உத்திரப்பிரதேச போலீசார் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளுக்குள் அதிரடியாக புகுந்து மூடச்சொல்லி வருகின்றனர். இதனால் பலர் தங்களது பூர்வீகத் தொழிலை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தினக்கூலிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதுபோக மாநிலம் முழுவதும் உயிரியல் பூங்காக்களில் இருக்கும் மிருகங்களுக்கு கிடைக்கும் ஆகாரமும் பறிபோய் விட்டது.
இதனால் சிங்கம், புலி, சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய் உள்ளிட்ட மாமிசம் பட்சிணிகள் பட்டினிக்கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ உயிரியல் பூங்கா அதிகாரிகள், தினமும் 235 கிலோ எருமைக்கறி சிங்கங்களுக்குத் தேவைப்படும். கடந்த இரண்டு நாட்களாக 80 கிலோவாக குறைந்துவிட்டதால் சிங்கங்களுக்கு முழுமையான உணவு கிடைக்கவில்லை என்றார்.
மேலும் அவர்கள் தெரிவித்தபோது, தற்போது உள்ள 47 விலங்குகளில் புலி 7, 4 வெள்ளைப்புலி, 8 சிங்கம், 8 சிறுத்தைப்புலி, காட்டுப்பூனைகள் 2 , ஓநாய் 2 , கழுதைப்புலி 2 , குள்ளநரி 2 உள்ளதாக கூறினார்கள்.
நேற்றுமுன்தினம் முதல் கான்பூர் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டதால் அங்குள்ள பிரபல உயிரியல் பூங்காவிலும் இதே நிலை இருப்பதாக அதன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எடாவா புலிகள் சரணாலய அதிகாரிகள் கூறும்போது, புலிகளுக்கு கடந்த மூன்றுநாட்களாக ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் குறைந்த கொழுப்பு இருப்பதால் புலிகள் உண்ண மறுக்கின்றன.
ஒரு புலி நாள்தோறும் 8 லிருந்து 10 கிலோ மாட்டுக்கறி சாப்பிடும். ஆனால் கடந்த 3 தினங்களாக அவைகளுக்கு அது கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக தெரிவித்தனர்.