பீஜிங்,

தெற்காசிய நாடுகளுடனான சீன உறவில் இந்தியா தலையிட்டால் எதிர்விளைவை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதியும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சாங் வான்குவான் இந்தவாரம் நேபாளத்துக்கும், இலங்கைக்கும் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.  இதனிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் குளோபல் டைம்ஸ் என்ற  தினப் பத்திரிகையில்  தெற்காசியாவையும் இந்தியப் பெருங்கடலையும் இந்தியா அதன் கொல்லைப்புறமாக நினைத்துக் கொள்வதாக புகுற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியா மேலும் இதைத் தொடர்ந்தால் சீனாவின் எதிர்ப்பை கடுமையாக சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்  என்றும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் பல்வேறு நிறுவனங்கள் தெற்காசிய நாடுகளில் அமைந்துள்ளன. அதனால் கூட்டுஒப்பந்தத்தின் அடிப்படையில்  அந்நாடுகளில் பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை சீனா  மேற்கொள்வது தவிர்க்கமுடியாத ஒன்று என்றும் அந்தப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் திபெத் தலைவர் தலாய்லாமாவுடன் இந்தியாவின் உறவையும் சீனா கடுமையாக கண்டித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை நாலந்தாவில் நடைபெறும் சர்வதேச புத்தமத மாநாட்டை திறந்துவைக்க தலாய்லாமாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.