டெல்லி:
வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்திவந்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளை அறிவுறுத்தும்படி தெரிவித்துள்ளார். மேலும், வறட்சி நிவாரணம் தொடர்பாக உயர்மட்டக் குழுவை கூட்டவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மார்ச் 23ல் உயர்நிலை கூட்டம் கூடு இருக்கின்றது.
இதற்கிடையே போராட்டம் நடத்திய விவசாயிகளை, இன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, மத்திய அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை விவசாயிகள் விலக்கிக்கொண்டதாக அமைச்சர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் உடனடியாக பல ஊடகங்களில் வெளியானது.
ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் வரை போராட்டம் வாபஸ் இல்லை என விவசாயிகள் திட்டவட்டமாக மறுத்தனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று வக்கீல் அய்யாக்கண்ணு அறிவித்தார்.