சென்னை,

மிழக சட்டசபையில் இன்று  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ், இது கடன் சுமையை அதிகரித்த வெற்று நிதிநிலை அறிக்கை என்றும், புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாத பட்ஜெட் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

2017-18 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில்  நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்திருக்கிறார்.  ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள இந்த அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த புதியத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. சாதாரண கணக்காளர் தயாரிக்கும் வரவு&செலவு திட்டம் எப்படி இருக்குமோ அதைப்போன்று தான் இந்த அறிக்கையும் உள்ளது.

புதிய நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகளோ, கட்டண உயர்வோ அறிவிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரிகளை ரூ.2000 கோடி அளவுக்கும், பேரூந்து கட்டணங்களை ரூ.900 கோடி அளவுக்கும் உயர்த்தி விட்டு புதிய வரிகளை விதிக்கவில்லை என்பது  மோசடியிலும் மோசடியானதாகும்.

அத்திக்கடவு&அவினாசி திட்டத்தை செயல்படுத்த ரூ.3523 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக குறைந்தபட்சம்  ரூ.1000 கோடியாவது ஒதுக்கினால் தான் அடுத்த 4 ஆண்டுகளில் அத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இயலும்.

மாறாக ரூ.250 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஏமாற்று வேலை ஆகும். இத்திட்டத்தின் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை ஈடுகட்டுவதற்கு கூட இந்த நிதி ஒதுக்கீடு போதுமான தல்ல.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.10,150 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோத்தாரி குழுவின் பரிந்துரைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.60,000 கோடியும்,  மக்களின் நலவழ்வை உறுதி செய்வதற்காக ரூ.40,000 கோடியும் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், அதில் பாதிக்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல.

காவல்துறைக்கு இப்போது நடைபெற்று வரும் ஆள்தேர்வுக்குப் பிறகும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கும் நிலையில், புதிய காவலர் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக 10,500 பேர் காவல் இளைஞர் படைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆளும் கட்சியினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கரும்பு மற்றும் உணவு தானிய உற்பத்தியும், சாகுபடி பரப்பும் குறைந்து விட்டது என்பதை தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனாலும், விவசாயத்தை ஊக்குவிப்ப தற்காக   எந்த ஒரு நடவடிக்கையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. வறுமை ஒழிப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால், மக்களுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டத்தை தவிர வறுமை ஒழிப்புக்காக வேறு திட்டம்  எதுவும் அறிவிக்கப்படவில்லை.  மொத்தத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இம்மாத இறுதிக்குள் மேலும் 2700 மதுக்கடைகள்  மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஆனாலும், மது விற்பனை மூலமான வருவாய் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதன் மூலம் மதுவை அதிக அளவில் மக்கள் மீது திணிக்க அரசு முடிவு செய்திருப்பதை உணர முடிகிறது.

தமிழக அரசின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை இந்த பட்ஜெட் மதிப்பீடு களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. 2016&17 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய்  ரூ.90,691 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கை விட குறை வாக ரூ.87,287 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டிருப்பது ஆட்சியாளர்களின் தோல்வியையே காட்டுகிறது. கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.40,533 கோடியாகவும், இது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.96 விழுக்காடாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.61,341 கோடியாக, அதாவது 4.58% ஆக அதிகரித்துள்ளது.

மின்சார வாரியத்தின் கடன்களில் ஒருபகுதியை அரசு ஏற்றதால் தான் எந்த பாதிப்பு என்று அரசு கூறியுள்ளது. எனினும், நடப்பு ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும் என எந்த அடிப்படையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

உதய் திட்டத்தின் கீழ் மின்வாரியக் கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கடனை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏற்க வேண்டும் என்பதால் நடப்பாண்டிலும் நிதிப்பற்றாக்குறையும், அதற்கு ஏற்றவகையிலான கடன்சுமையும் அதிகரிக்கும். அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.

2017&18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.3,14,366 கோடி கடன் வாங்கப்படும், நடப்பாண்டில் மட்டும் ரூ.41,965 கோடி கடன் வாங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையையும் கணக்கில் கொண்டால் நடப்பாண்டின் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.5.75 லட்சம் கோடியாக இருக்கும்.

அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.79,861 கோடி கடன் இருக்கும். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, கடன் வளர்ச்சியில் தான் தமிழகத்தை முன்னணிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எவ்வளவு விரைவாக அகற்றப்படுகிறதோ, அப்போது தான்  தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என்பது தாம் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.