பாங்காங்,
தாய்லாந்தில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டாமிருக கொம்புகளை கடத்திய கும்பலை அந்நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

உலகில் உள்ள பல அரிய உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு சுற்றுப்புறச்சூழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் விலங்குகள் வேட்டையாடப்படுவதுதான் உண்மையான காரணமாக உள்ளது. உலகச் சந்தையில் யானை, காண்டா மிருகம் உள்ளிட்ட அரிய உயிரினங்களின் கொம்புகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

குறிப்பாக தாய்லாந்து இதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் இந்தநாட்டுப் போலீசாருக்கு கடத்தல்காரர்களை பிடிப்பது தலைவலியாக உள்ளது. இந்நிலையில் நேற்று தலைநகர் பாங்காக் அருகே போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு பெண்களிடம் இருந்த பைகளை சோதனையிட்டனர். அப்போது விலைமதிப்புமிக்க காண்டாமிருகத்தின் கொம்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, எத்தியோப்பிய நாட்டிலிருந்து தாய்லாந்துக்குக் கடத்திவரப்பட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் தாய்லாந்திலிருந்து வியட்நாமுக்கும், கம்போடியாவுக்கும் கடத்தவிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 21 காண்டாமிருக கொம்புகள் பிடிபட்டதாகவும் அவற்றின் மதிப்பு இந்திய ரூபாயில் 32கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் கூறினர்.