ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மணல்சரிந்து இரண்டு பெண் கட்டடத் தொழிலாளர்கள் உயிருடன் பூமியில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத்தில் உள்ள கொண்டாபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது.  நேற்று காலையில் இந்தப்பகுதியில் பூமி மட்டத்திலிருந்து 40 அடி ஆழத்தில் நிலவறை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. அப்போது திடீரென்று அங்கு குவிக்கப்பட்டிருந்த மணல் மளமளவென சரிந்து கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த பரதம்மா, கிருஷ்டம்மா என்ற இரு பெண்கள் மீது குவிந்தது. இதையடுத்து உயிருக்குப் போராடிய அவர்களை இரண்டு மணி நேரம் போராட்டத்துக்குப் பின் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இந்தவிபத்தில் மேலும் இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடம் கட்டும்போது மணல்பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இங்கு அது செய்யப்படவில்லை என்றும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.