அகமதாபாத்:
மாடுகளை பாதுகாக்கும் வகையில் மாடு வதை தடுப்பு சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜூன்னாகத் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபனி பேசுகையில், ‘‘தற்போதுள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் நட க்கவுள்ள குஜராத் சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் இதற்கு சிறப்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும்.
இச்சட்ட திருத்த மசோதாவில் பசுக்களை இறைச்சிக்காக கொலை செய்தாலோ அல்லது மாட்டு இறைச்சியை வாகனம் மூலம் கொண்டு சென்றாலோ ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இச்சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்படும்’’ என்றார்.
2011ம் ஆண்டு முதல் குஜராத்தில் பசு வதை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 1954ம் ஆண்டின் குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்மாநில முதல்வராக மோடி இருந்தபோது இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி தற்போது ரூ. 50 ஆயிரம் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.