டில்லி,
ஆதார் அட்டை இல்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கிடையாது என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். மேலும் 2 கோடி பேருக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த இருப்பதாகவும் கூறி உள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவது குறித்த கேள்வி ஒன்றுக்கு, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் பதில் அளித்து கூறியதாவது,
‘உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி 79 கோடி மக்கள் அரிசி, கோதுமை ஆகியவற்றை மானியமாக பெறுகின்றனர். இவர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.3 என்ற விலையில் தலா 5 கிலோ உணவு பொருட்களை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ள 2 கோடி பேரின் பெயர்களையும் மாநில அரசுகள் வழங்கினால் அவர்களும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி குறைந்த விலையில் உணவு தானியங்களை பெறலாம்.
மேலும் மத்திய அரசு ஆதார் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாத பயனாளிகளின் உணவுதானிய அளவு குறைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதன் மூலம் ஆதார் அட்டை இல்லை என்றால் இனி ரேஷன் பொருட்கள் கிடையாது என்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் சரிவர விநியோகம் செய்யப்படுவது இல்ல. இந்நிலையில் பஸ்வானின் நேற்றைய பேச்சு அதை உறுதிபடுத்துவதாகவே உள்ளது.