லக்னோ-
உத்தரபிரதேச தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் கூட்டணியில் சேரலாமா அல்லது சேரவேண்டாமா என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது. உத்தர பிரதேசம், கோவா, உட்பட சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இதில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதியின் ஆட்சி தற்போது நடக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இதில் பா ஜ க வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பா.ஜகவை ஓரம்கட்ட, யாருடனும் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை மரியாதையுடன், தான் நடத்தி வந்துள்ளதையும் நினைவுகூர்ந்துள்ளார். இதனால், மாயாவதியிடம் உதவி கேட்பது இயற்கையானதுதான் என்றும், மதவாத சக்திகளை விரட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று அகிலேஷ் யாதவ் சூசகமாக குறிப்பிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது யாருடனும் கூட்டணி அமைக்கும் யோசனை இல்லையென்றும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று பகுஜன் சமாஜ்வாடி கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.