ராமேஷ்வரம்,
கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்படுவதும், இலங்கை மீனவர்களால் சுட்டுக்கொல்லப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதுகுறித்து இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் பேச்சு வார்த்தை என்று பெயரில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது.
இந்நிலையில் நேற்றும் ஒரு மீனவர் இலங்கை கடற்படையினரின் குண்டுவீச்சில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரிஜோ, ஜெரோன், கிளின்டன், அந்தோணி, சந்தியா உள்ளிட்ட 6 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்தனர். மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்த அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், மீனவர்களின் படகுகளின்மீது கையெறி குண்டுகளை வீசியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் சுட்டதில் பிரிட்ஜோ என்ற 21 வயது மீனவர் உயிரிழந்தார். மேலும் ஜெரோன் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மீதமுள்ள 4 மீனவர்களும், நள்ளிரவில் ராமேஷ்வரம் துறைமுகத்தை வந்தடைந்தனர்.
இலங்கை கடற்படையினரால் சூழப்பட்ட தங்கள் மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்ததாக மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். உயிரைக் காக்க உடைமைகளை விட்டுவிட்டு ஓடி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த ஜெரோன் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பலியான மீனவரின் உடலைப் பார்வையிட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது,
இலங்கை கடற்படையின் தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ள தாகவும்,இந்திய கடற்படை அங்கு உரிய நேரத்தில் வந்திருந்தால் மீனவர் பிரிட்ஜோவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
மத்தியஅரசு மற்றும் கையாலாகாத தமிழக அரசுகளின் மெத்தனம் காரணமாகவே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.