மும்பை:

பணமதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு கட்டணமாக வங்கிகளில் இருந்து பணம் எடுக்க, செலுத்த கட்டணங்களை வங்கிகள் அறிவித்து வருகிறது. இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகள் புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் மாதத்திற்கு 4 பண பரிவர்த்தனை மட்டுமே இலவசமாக மேற்கொள்ள முடியும். அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 150 கட்டணம் விதிக்கப்படும். ஹெச்டிஎப்சி.யில் வங்கி கணக்கு உள்ள கிளையில் ரொக்க டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவை ரூ. 2 லட்சம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆக்ஸிஸ் வங்கி இதற்கு ரூ. 1 லட்சம் மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் எந்த கிளையில் வேண்டுமானாலும் இதை மேற்கொள்ளலாம்.

 

இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆனால், இதில் சுய தொழில் செய்வோர், தொழில் முறை வல்லுனர்கள், சிறு தொழில் அதிபர்களுக்கு தான் அதிகம் பாதிக்கும் என்றும், சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களை அதிகம் பாதிக்காது என்று நிதித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷ்பின் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிஷி மேத்ரா கூறுகையில், ‘‘சுய தொழில் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிக பண பரிமாற்றம் மேற்கொள்வார்கள். அவர்களுக்கு இது அசவுகர்யமாக இருக்கும். அவர்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் பொதுவாக ஒரு மாதத்தில் 3 அல்லது 4 முறைகளில் வங்கியிலோ அல்லது ஏடிஎம்.களில் பணத்தை செலுத்துவது மற்றும் எடுக்கச் செய்வார்கள். அதனால் அதிக முறை பணம் எடுப்பவர்கள், செலுத்துபவர்கள் இதற்கு ஏற்ப திட்டமிட்டு வங்கியில் பண பரிமாற்றத்தை மேற்கொண்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

புத்தா பினான்ஸ் நிறுவன இணை நிறுவனர் பார்த் பாண்டே கூறுகையில்,‘‘சிறு தொழில்கள் இதில் அதிகம் பாதிக்கும். இவர்கள் தினமும் வியாபாரிகளுக்கு பணம் கொடுக் வேண்டி இருக்கும். புதிய தொழில்நுட்ப ரீதியிலான பண பரிவர்த்தனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாத வங்கி வாடிக்கையாளர்கள் இதில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக முதியவர்களும், ஏழைகளும் இதில் அடக்கம்.

கட்டண விதிப்பை தவிர்க்க டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் மாற வேண்டும். ரொக்கத்தை நம்பி இருக்காமல் சிறிய அளவிலான பணத்துக்கு கூட டிஜிட்டல் முறைக்கு மாற வாடிக்கையாளர்கள் பழகி கொள்ள வேண்டும். கட்டண விதிப்பு மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாய நிலையை வங்கிகள் ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.