சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது குறித்து டி.டி.வி. தினகரன் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரா வி.கே. சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். கட்சி விதிகளின்படி இது தவறு என்று அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன், தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம். இந்த நோட்டீஸுக்கு அ.தி.மு.க. துணைப்பொதுச்செய லாளராக பொறுப்பேற்றுள்ள டி.டி.வி. தினகரன் பதில் அளித்தார்.
இதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. “தினகரன் கட்சிப் பொறுப்பில் இருப்பதுகுறித்த எந்தத் தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆகவே ஆணையத்தைப் பொறுத்தவரை தினகரனுக்கும் அ.தி.மு.க வுக்கும் தொடர்பில்லை. ஆகவே தன் மீதான விளக்கத்துக்கு சசிகலா பதில் அளிக்க வேண்டும். அல்லது தன் சார்பாக பதில் அளிப்பவர் குறித்து அவர் தெரிவிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.
இது குறித்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், “தினகரனை பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது நீதிக்கு கிடைத்த முதல் வெற்றி. அடுத்துவரும் நல்ல தீர்ப்புக்கு இது முன்னோடி. அடுத்து சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டதும் கட்சி விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்றார்.
மேலும் அவர், “பொதுக்குழு உறுப்பினர்களில், பெரும்பாலா னோர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர். அ.தி.மு.க., ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த தர்ம யுத்தத்தை துவக்கி உள்ளோம்.
தற்போதுள்ள அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம், எங்களுக்கு கிடையாது. குடும்ப ஆதிக்கம் ஒழிந்து, பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம். அது விரைவில் நடக்கும்” என்றார்.