சென்னை:

ஸா ஆசிரமத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்த ஆதியோகி சிவன் சிலை, மற்றும்  மண்டபங்கள் கட்ட ஒரு லட்சம் சதுரஅடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ், “ஈசா மையம்” என்கிற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

ஜக்கி – மோடி

இந்த மையம், சட்டத்துக்குப் புறம்பாக காட்டுப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி வருகிறது என்றும், யானை வழித்தடங்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளது என்றும் பல காலமாக புகார்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஈசா யாகோ மையத்தில் பிரம்மாண்டமான ஆதியோகா சிவன் சிலை கட்டப்பட்டது. கடந்த 24ம் தேதி இதை பிரதமர்  மோடி திறந்தவைத்தார். இந்த விழாவில் தமிழக புதுவை கவர்னர்கள், தமிழக முதல்வர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈஷா மையத்துக்கு எதிராக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கோவை ஈசா மையத்தில் விதிகளை மீறி கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்கான அபராதத் தொகையை அரசுக்கு செலுத்தவில்லை.

மேலும், ஆதியோகி சிவன் சிலை மற்றும் மூன்று மண்டபங்கள் கட்ட ஒரு லட்சம் சதுரஅடி அளவுக்கு ஈசா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

ஆதியோகி சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய ஈசா மையத்திடம் கேட்டுள்ளோம்.  மதவழிபாட்டைக் கருத்தில் கொண்டு 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை மாற்ற கோவை ஆட்சியர் அனுமதியளித்தார்’ என்று  தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை மறு நாள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.