வாஷிங்டன்:

கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் கூட்டம் அதிகம் உள்ள ஒரு பாரில் இன வெறியன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஐதாராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்ற பொறியாளர் கொல்லப்பட்டார். மேலும ஒரு இந்தியர் காயமடைந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, அந்த கொலைகாரனை துணிச்சலாக எதிர்த்து, அவனுடன் போராடிய நபர் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நிலை தேறி வருகிறார். அவர் குறித்து கன்சாஸ் பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கிரில்லாட் என்ற 24 வயதுடைய அந்த வாலிபர் தான் தற்போது அங்கு ஹீரோவாக பார்க்கப்படுகிறார். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளை தளங்களில் கிரில்லாட்டுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்குளும் குவிகின்றன. கொலைகாரனுடன் அவர் எப்படி போராடினார் என்பதை அந்த வீடியோவில் அவர் விளக்குகிறார்.

அதில், ‘‘நான் அவன் பின்புறம் நின்றேன். அவன் சுடும் போது நான் அவனை மடக்கி பிடித்தேன். அடுத்த கனம் அவன் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். தோட்டா எனது கை வழியாக மார்புக்குள் நுழைந்தது. எனினும் பெரிய ஆபத்து இல்லாமல் அதிர்ஷ்டவசமாக நான் தப்பினேன். அவனால் சுடப்பட்டது யார்? என்பது குறித்து எனக்கு தெரியாது. அது எனக்கு முக்கியமல்ல. ஆனால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எதிராக அறிவித்து வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து இத்தகைய சம்பவம் நடந்துள்ளது. டிரம்ப் அரசாங்கம் இதை கண்டு கொள்ளாமல் இருக்குமேயானால் இது போன்ற இன வெறி தாக்குதல் தொடரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கன்சாஸ் பகுதியில் உள்ள அந்த பார் ஊழியர் கெரத் போனென் என்பவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர். அவர் கூறுகையில்,‘‘ அந்த இரு இந்தியர்களும் அமைதியான முறையில் தொலைக்காட்சியில் கூடைப்பந்து போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் இந்த தாக்குதல் நடந்தது.

இனவெறியுடன் கொலைகாரன் பேசியதை பார்த்தவுடன் கிரில்லாட் எழுந்து நின்று இந்தியர்களுக்காக குரல் கொடுத்தார். அவரை நினைத்தால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது, ’’ என்றார்.

புரிங்டன் என்ற அந்த 51 வயது இனவெறியன் அடுத்த 70 மைல் தூரத்தில் உள்ள மற்றொரு பாரில் இருந்து கைது செய்யப்பட்டான். இன வெறி காரணமாக தான் தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளான்.