புனே:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்தது.
ஸ்டார்க் 57, ஹேசல்வுட் 1 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்டார்க் 61 ரன் எடுத்து (63 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அஷ்வின் சுழலில் வெளியேற, ஆஸ்திரேலியா 260 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஹேசல்வுட் 1 ரன்னுடன் (31 பந்து! ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டார்க் – ஹேசல்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து.
இந்திய பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டையும், அஷ்வின் 3 விக்கெட்டையும், ஜடேஜா 2 விக்கெட்டும், ஜெயந்த் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்து 6 ரன் எடுத்த நிலையில் புஜாராவும் அவுட்ஆனார்.
அதையடுத்து இறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி டக்அவுட் ஆகி வெளியேற, 44 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்தது இந்தியா. தொடர்ந்து தடுமாற்றத்துடன் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40.1 ஓவிரில் 105 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா 11 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஷாந்த் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஓ கீப் 35 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டார்க் 2, ஹேசல்வுட், லியான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்துள்ளது. வார்னர் 10, ஷான் மார்ஷ் 0, ஹேண்ட்ஸ்கோம்ப் 19, ரென்ஷா 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 59 ரன், மிட்செல் மார்ஷ் 21 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆஸ்திரேலியா அணி கேப்டன் சதம் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனையடுத்து 441 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 107 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய பவுலர் ஓ கீப்-ன் சுழல் பந்துவீச்சில் இந்திய விக்கெட் மளமளவன சரிந்தது. அவர் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.