டெல்லி:
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆயிரத்து 850 மருந்துகள் தரமற்றவை என்றும், 13 மருந்துகள் போலி என்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 650 மாவட்டங்களில் உள்ள சில்லரை மருந்து விற்பனை கடைகள், அரசு மருந்தகங்கள், 8 விமானநிலையங்கள் மற்றும் கப்பல் துறை முகங்களில் இருந்து 47 ஆயிரத்து 954 மருந்து மாதிரிகள் சேகரிப்பட்டு தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்திய சுகாதார துறை மேற்கொண்ட இந்த ஆய்வில் ஆயிரத்து 850 மருந்துகள் தரமற்றவை என்பதும், 13 மருந்தகள் போலி என்பது தெரியவந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள் அடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 மருந்துகளின் 224 மருந்து மூலக் கூறுகள் ஆய்வுக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது. நொய்டாவில் உள்ள தேசிய பயலாஜிக்கல் மையத்திடம் இந்த ஆய்வுப் பணியை மத்திய சுகாதார துறை ஒப்படைத்தது. இந்த ஆய்வுப் பணியோடு, சர்வே எடுப்பது தொடர்பாக தேசிய அளவில் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மாதிரி எடுக்கும் அலுவலர்கள், இந்திய மருந்தக குழு உறுப்பினர்கள் என ஆயிரத்து 800 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாதிரி எடுக்கப்பட்ட மருந்துகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யபப்பட்டது.