டில்லி,
இந்தியாவின் தலைநகரான டில்லியில் புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டு வங்கி ஏடிஎம் ஒன்றில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு குறித்து மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த நோட்டில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகவும், இதுபோல கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியது.
ஆனால், நாடு முழுவதும் ஆங்காங்கே புதிய 2000 நோட்டுக்கள் போல கள்ளநோட்டுக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் விநியோகித்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. அதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஒரு பங்களாவில் புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டு அச்சடித்த 4 பேர் கொண்ட கள்ள நோட்டு கும்பல் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டில்லியில் கடந்த 6ந்தேதி சங்கம் விகார் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம்-ல் பணம் எடுத்த போது, கள்ள நோட்டுக்கள் வந்தது தெரியவந்துள்ளது.
அந்த நோட்டில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என்றும் இருக்கும் இடத்தில், சில்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்றும், கியாரண்டி மத்திய அரசு என்பதற்கு பதிலாக, கியாரண்டி சில்ரன்ஸ் வங்கி என பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
அச்சு அசல் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுபோல இது காணப்படுவதால் எளிதில் இதை கள்ளநோட்டு என்று கண்டு பிடிக்க முடியாத அளவில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற ‘புலி’ சின்னம் பொறிக்கப்பட்ட வட்ட லோகோ பொறிக்கப்பட்ட இடத்தில் பிகே என்ற பெயரிடப்பட்ட வட்ட லோகோ பொறிக்கப்பட்டு உள்ளது.
இது வங்கி அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வங்கி அலுவலர் ஒருவர் கூறியதாவது,
தெற்கு டில்லி பகுதியில் உள்ள சட்டர்பூர் பகுதியை சேர்ந்த ரோகித் என்பவர், எஸ்பிஐ வங்கியில் இரவு 7.45 மணி அளவில் 8000 ரூபாய் பணம் எடுத்ததாகவும், அப்போது நான்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்ததாகவும் கூறி உள்ளார்.
மேலும், அந்த நோட்டுக்களை பார்த்தபோது, அதில் சீரியல் எண் இருக்கும் இடத்தில் 000000 என வெறும் ஜீரோ மட்டுமே இருந்ததையடுத்து, உடனடியாக அருகிலுள்ள போலீசில் புகார் கொடுக்கப்பட்டு என்றார்.
போலீசார் உடடினயாக சம்பவம் நடைபெற்ற ஏடிஎம்-க்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து, போலி அல்லது கள்ள நோட்டுகளை பயன்படுத்தி மற்றும் ஏமாற்றுதல் வழக்கு தண்டனை சட்டம் 489-பி, 489-இ மற்றும் 420. ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.