டெல்லி:
புதிய அவதாரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானவுடன் புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை புதிய வடிவமைப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை கொண்டே புழக்கத்தில் இருந்த ரூ. 15.44 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 27ம் தேதி வரை ரூ. 2,000 மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் ரூ. 9.92 லட்சம் வரை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதை ரிசர்வ் வங்கி உறுதியாக தெரிவிக்க மறுத்து வருகிறது.
மேலம், சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ. 50 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ள நேற்று முதல் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 13ம் தேதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியிட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்திருந்தது.
இதை அச்சடிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால், முதலில் புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிட வேண்டிய அவசரம் இருந்ததால் ஆயிரம் ரூபாய் வெளியிடுவது தாமதமாகி வருகிறது. எப்போது புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்பது இன்னும் உறுதிபடுத்த முடியவில்லை.
அதோடு, பழைய ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தையும் ரிசர்வ் வங்கி தெரிவிக்க மறுத்து வருகிறது. வரும் மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில் உரிய ஆவணத்துடன் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதால் ஜூன் 30ம் தேதிக்கு மேல் தான் அதிகாரப்பூர்வ டெபாசிட் தொகை வெளியாகும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.