சென்னை:

விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

காவிரி நீரை தர கர்நாடகம் மறுத்து வருவதாலும், இயற்கை பொய்த்து போனதாலும் தமிழகத்தில் போதிய தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து போனது. மழை வரும், கால்வாயில் தண்ணீர் வரும் என்று நம்பி விதைகளை பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதை கண்டு அதிர்ச்சியாலும், தற்கொலை செய்தும் தங்கள் உயிரை விட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து இன்று  தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில் அதிகாரிகள் பங்குபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வறட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வறட்சி நிவாரணம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

மானாவரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3000 நிவாரணமும்,  பாதிக்கப்பட்ட நெற்பயிர், இதர பாசனத்துக்கு ஏக்கருக்கு ரூ.5,465 வழங்கப்படும் எனவும்,  நீண்டகால பயிருக்கு ஏக்கருக்கு ரூ.7287 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  32,30,191விவசாயிகளுக்கு இடுபொருள் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு ரூ. 4800 முதல் ரூ.69,000 வரை ஈட்டுத் தொகை பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பட்டுப்புழு வளர்ப்பு – ஏக்கருக்கு ரூ.2428 முதல் ரூ.3000 வரை நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.