
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதை தொடர்ந்து, அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.
அப்போது ஏற்பட்ட அமளி காரணமாக எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று, எடப்பாடி வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய தவறு என்றும், ஒரே நாளில் இரண்டு முறை சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதுகுறித்து சட்ட வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்….
சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் – இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், சபையில் இருந்து தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் – இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சட்டமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் கூடுதலாக இத்தனை காவலர்கள் தேவை என்று சபாநாயகர் கடிதம் அனுப்புவதே சம்பிரதாயம். அதனடிப்படையில்தான் போலீஸ் கமிஷனர், காவலர்களை சட்டமன்றத்துக்கு அனுப்புவார்.
ஆனால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் திமுகவினரை வெளியேற்ற தேவையான காவலர்கள் என்று சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் கேட்டு சபாநாயகர் கடிதம் அனுப்பியது விதி மீறல் என கூறப்படுகிறது.
மேலும், சபை காவலர்கள் சட்டமன்றத்திற்கு வெளியே நிற்பதுதான் நடைமுறை. சபாநாயகர் அழைத்தால் மட்டுமே உள்ளே வர வேண்டும் என்பது மரபு.
ஆனால் ஓட்டெடுப்பு நடந்தபோது, தி.மு.க.,வினர் ரகளை காரணமாக அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், சபை காவலர்களால் வெளியேற்ற முடியவில்லை. இதனால் சபை மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்து சபாநாயகர் வெளியேறி விட்டார்.
அதன்பிறகே, கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து, தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை அடித்து உதைத்து குண்டுக் கட்டாக வெளியேற்றினர்.
சபாநாயகர் சபையில் இல்லாத போது, காவலர்கள் உள்ளே நுழைந்தது விதிமீறல் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். சபாநாயகர் இருக்கும் போது மட்டுமே,சபை உறுப்பினர்கள் வெளியேற்றம் நடைபெற வேண்டும்.
மேலும், சபாநாயகர் ஒட்டுமொத்தமாக அனைவரையும் வெளியேற்றுங்கள் என கூற முடியாது. அது விதி மீறல். , தவறு செய்த உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டே சபையை விட்டு வெளியேற்றும்படி உத்தரவிட வேண்டும் என்பதுதான் விதி. அதை சபாநாயகர் பின்பற்றவில்லை.
ஏற்கனவே இதுபோல ஒரு நிகழ்வு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட போது, பெயர் குறிப்பிடாமல் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யச்சொல்லி சபாநாயகர் உத்தரவிட்டால் அன்று சபைக்கு வராதவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, தி.மு.க. எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த இன்றும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டின் கேள்விக்கு இதுவரை சரியான பதில் கூற முடியாமல் சபாநாயகர் தவித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது.
மேலும், சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை தவிர அனைத்து எதிர்க்கட்சியினரும் ‘ரகசிய ஓட்டெடுப்பு’ நடத்த வேண்டும் என்றும், சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்’ என, வலியுறுத்தி பேசின.
எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏன் சபாநாயகர் பரிசீலனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்படி விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதால், எதிர்க்கட்சியினர் கோர்ட்டுக்கு சென்றால், சபாநாயகரின் முடிவு கேள்விக்குறியதாகவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஓட்டெடுப்பு செல்லாது என கோர்ட்டு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக எடப்பாடி அரசுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எத்தனை நாள் இந்த அரசு நீடிக்கும் என்றும் கேள்விக்குறியாகி உள்ளது.
[youtube-feed feed=1]