மெல்பர்ன்,
ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று உயரமான கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எசன்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அந்த பகுதியில் உள்ள உயரமான மால் கட்டிடத்தின்மீது மோதி, தீப்பிளம்பாக வெடித்து சிதறியது.
விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மாலின் மேற்புறக் கூரையில் விழுந்து விபத்திற்குள்ளானது கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாவும், காலையில் அந்த மாலில் யாரும் பணிக்கு வராததால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் கூறினர்.
மேலும் விமான விபத்தின்போது அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்ததாகவும், விமானத்தின் உடைந்த பாகங்கள் அந்த கட்டிடம் முழுவதும் சிதறிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விமான விபத்தை பார்த்த டாக்சி டிரைவர் ஒருவர் கூறும்போது, ஒரு பெரிய தீப்பிளம்பு ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் ஜேசன் என்பவர் கூறுகையில், அந்த விமானம் கட்டிடத்தில் இடித்து விபத்துக்குள்ளானது என்று கூறி உள்ளார்.
விபத்தை தொடர்ந்து எசன்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.