டெல்லி:

பாபா ராம்தேவுக்கு சொந்தமாகன ‘பதஞ்சலி யோகா பீடம்’ என்ற அமைப்பு பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பதஞ்சலி நிறுவனம் சார்பில் பல்வேறு மூலிகை பொருட்கள் அடங்கிய மருத்துவ குணம் கொண்ட பொருட்களை தயார் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் இந்த வர்த்தகம் தற்போது கொடி கட்டி பறக்கிறது. இந்த நிறுவனம் தனது பொருட்கள் குறித்து போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்று நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது என்பது வேறு கதை.

இது தவிர யோகா பயிற்சி, சொற்பொழிவு போன்றவற்றையும் ராம்தேவ் நடத்தி வருகிறார். மேலும் இவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.

இந்த அமைப்புக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வருமான வரித் துறை நிராகரித்து இருந்தது. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பஞ்சீலி நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம் வருமான வரியில் இருந்து விலக்கு அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.

‘‘யோகா, மருத்துவ முகாம்கள், கல்வி உதவி ஆகியவற்றை இந்த அமைப்பு வழங்குவதன் மூலம் மருத்துவ நிவாரணம் மறறும் கல்வி வழங்குதலில் ஈடுபடுவது உறுதியாகிறது. அதனால் இந்த அறக்கட்டளைக்கு வருமான வரியில் விலக்கு பெற உரிமை உள்ளது’’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘யோகா பரப்புதலை மருத்துவ நிவாரணமாகவும், கல்வி போதித்தலில் ஒரு பகுதியாகவும் வருமான வரித் துறை எடுத்துக் கொள்ள மறுத்தது அநீதியாகும். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட் டுள்ள வருமான வரித் துறை சட்ட திருத்தத்தில் ‘யோகா’ அறக்கட்டளை விதியின் கீழ் வருமாவ வரி விலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த அறக்கட்டளையின் மொத்த வருவாயும் வருமான வரி விதிப்பின் கீழ் வராது’’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீர்ப்பாயத்தில் முடிவில், ‘‘இந்த அறக்கட்டளையில் ஆஸ்ரமத்தில் தங்கி யோகா பயிற்சி பெறுவதற்காக குடில் அமைக்க கார்பரேட் நிறுவனங்கள் அளித்துள்ள ரூ. 43.98 கோடி நன்கொடை மூலதன வருவாயாகும். இதற்கு வருமான வரி கிடையாது.
ரூ. 68 லட்சம் மதிப்புள்ள நிலம் நன்கொடையாக பெற்றதற்கும் இது பொருந்தும்.

வருமான வரி விலக்கு சலுகை பெறாத அறக்கட்டளைக்கு கூட கார்பரேட் நிறுவன முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. வேத ஒலிபரப்பு மூலம் இந்த அறக்கட்டளைக்கு கிடைத்த வருவாயை இதர வருவாய் கணக்கில் வருமான வரித் துறை கொண்டு வந்திருப்பது சரியல்ல’’ என்று கூறப்பட்டுள்ளது.