நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து, வானிலை குறித்த தகவல் அளித்ததாக கூறி ரூ.990 கோடி அபேஸ் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 1.1 கோடி விவசாயிகள், ‘கிசான் கிரெடிட் அட்டை’ வைத்துள்ளனர். இவர்களில், எஸ்.பி.ஐ., வங்கியில் மட்டும் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு கோடி விவசாயிகள் மட்டுமே. இந்த விவசாயிகளுக்கு வானிலை தகவல்களை அளிப்பதற்கு, மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை,
எஸ்.பி.ஐ., வங்கி நியமனம் செய்துள்ளது.
16 மாநிலங்களில் எஸ்.பி.ஐ., வங்கியின், 500 கிளைகளின் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில்
அளிப்பதுடன், வானிலை குறித்த தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி வந்தது இந்நிறுவனம்.
இந்நிலையில், விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த, ஹஜாரிலால் சர்மா என்ற விவசாயிக்கு, வானிலை சேவை வழங்கியதற்கு ஆண்டுக்
கட்டணமாக, அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 990 ரூபாய் பிடித்தம் செய்திருப்பதாக, வங்கியில் இருந்து தகவல் வந்தது.
மத்திய அரசின் கட்டணமில்லா எண் மூலம், விவசாயிகளுக்கு வானிலை குறித்த தகவல்கள் இலவசமாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து, சர்மா எழுத்து மூலம் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாருக்கு பதில் அளிக்காமல் பணத்தை திருப்பி அளிக்கவும் மறுத்துவிட்டது.
இதுகுறித்து, அந்த பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக் கிளையின் மேலாளர், பி.எஸ்.பகேல் கூறியதாவது: ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆண்டுக் கட்டணம், 990 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., வங்கியின் கிசான் கிரெடிட் அட்டை வைத்திருக்கும், ஒரு கோடி விவசாயிகளின் கணக்குகளில் இருந்து, மொத்தம், 990 கோடி ரூபாய், எஸ்.பி.ஐ., வங்கிக் கிளை மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
விவசாயிகளின் எழுத்துபூர்வ அனுமதி பெற்றே, கட்டணம் வசூலிக்கப்பட்டதாக, எஸ்.பி.ஐ., வங்கியின் விவசாய பிரிவு தலைமை பொது மேலாளர், ஜிதேந்திர சர்மா கூறினார். ஆனால் தங்களது அனுமதியில்லாமல் தங்களது கணக்கில் இருந்து பணம் பிடித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.