கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கவைைக்கப்பட்ட “கோல்டன் பே” ரிசார்ட் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோரை, சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள “கோல்டன் பே” ரிசார்ட்டில் தங்கவைத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா. தற்போது சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கண்ணானிப்பில் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே அங்கு எம்.எல்.ஏக்கள் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சிக்கலான சூழலில் இன்று காலை அந்த எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் வந்தனர். தற்போது சட்டமன்றத்தில் மெஜாரிட்டி குறித்த வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. சட்டசபையில் பதட்டமான சூழல் நிலவுவதால் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோல்டன் பே ரிசார்ட் நிர்வாகம், எம்.எல்.ஏக்களை அறைகளை காலி செய்யும்படி வலியுறுத்தியது. ஆனால் அதற்கு சசிகலா தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு வந்துவிட்ட சூழலை பயன்படுத்தி கோல்டன் பே நிர்வாகம் ஓட்டலை மூடிவிட்டது. ஓட்டலின் முன், “பராமரிப்பு பணி நிலவுவதால் தற்காலிகமாக ஓட்டல் மூடப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.