டில்லி:
இன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதில் வாக்களிப்பது குறித்து நேற்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் அக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சிறிது நேரத்திலேயே இதை மறுத்த திருநாவுக்கரசர், வாக்களிப்பது குறித்து இன்று காலை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார். “சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடிக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்படுவதாகவும், அவர் விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார்” என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அக் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அக் கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.