மொத்தமுள்ள ஒன்பது கிரகங்களில், ஒன்றான வீனஸ் கிரகம் தன் கடும் வெப்பமான மேற்பரப்பில் பல எரிமலைவாய்களை (crators) கொண்டுள்ளது, அவை அனைத்தும் அவரவர் துறையில் சாதித்த பெண்களின் பெயருக்குப் பின்னால் பெயரிடப்பட்டது. ஜோஷீ எரிமலைவாய், ஜிராத் எரிமலைவாய், மற்றும் மேதாவி எரிமலைவாய் ஆகிய மூன்று எரிமலைவாய்களும் உயர்வாகச் சாதனைப் புரிந்த இந்தியப் பெண்களின் பெயரினைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.
ஜோஷீ எரிமலைவாய், ஆனந்தி கோபால் ஜோஷி (1865-1887) அவர்களின் நினைவாய் பெயரிடப்பட்டது. இவர் தான் அமெரிக்காவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பட்டதாரி பெண்மணியாவார். இவர் தெற்காசியாவைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர்களுள் ஒருவர். இவரது கதை எவ்வளவு ஊக்கமளிப்பதாக உள்ளதோ அவ்வளவு துயரங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அக்காலகட்டத்தில் குழந்தை திருமணம் வழக்கமாக இருந்தது, அவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரது மகன் அவருக்குப் பதினான்கு வயதிருக்கும் போதே பிறந்தான், ஆனால் பத்து நாட்கள் மட்டும் தான் அக்குழந்தை உயிருடன் இருந்தது. குழந்தையை பறிகொடுத்த அவரது மனக்கவலை, அவரை மருத்துவ அறிவியலில் பட்டம் பெற உந்துசக்தியாய் இருந்தது. எனினும், அவர் புகழ்பெற்று வெற்றியுடன் மும்பைக்குத் திரும்பியபோது காசநோய் அவரது உயிரைப் பறித்தது. இவையனைத்தும் அவருக்கு 22 வயது நிரம்புவதற்குள் நடந்து முடிந்துவிட்டது.
ஜிராத் எரிமலைவாய், ஜெருஷா ஜிராத் (1891-1984) அவர்களின் நினைவாய் பெயரிடப்பட்டது. ஜிராத் அவர்களும் ஒரு மருத்துவர். அவர் பெனெ இஸ்ரேல் யூத சமூகத்தின் உறுப்பினராக இருந்தார். லண்டனில் படிக்க இந்தியா அரசாங்கத்தின் உதவித்தொகைப் பெற்ற முதல் பெண் ஜிராத் ஆவார். அங்கு அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பிரிவில் எம்.டி. பட்டம் பெற்றார். அவரது சாதனைகளுக்கும், இந்தியாவில் மருத்துவக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகளுக்கும், மற்றும் பெண் மருத்துவர்கள் உருவாகுவதற்கு காரணமாக இருந்ததற்கும், பிரிட்டிஷ்காரர்களால் MBE (பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர்) (சிவில்) என்ற பட்டமும், 1966 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
மேதாவி எரிமலைவாய், ராமாபாய் மேதாவி (1858-1922) என்ற சமஸ்கிருத மேதை, பெண்கள் உரிமைகள் போராளி, மற்றும் சமூக ஆர்வலர் நினைவாய் பெயரிடப்பட்டது. அவர் ஒரு சமஸ்கிருத மேதைக்குப் பிறந்தவர், தனது தந்தையின் அறிவுறுத்தலின் கீழ் தானும் ஒரு சமஸ்கிருத மேதையானார். 20 வயதிலேயே பண்டிதர் பட்டம் பெற்றார். 22 வயதில் திருமணம் செய்து கொண்ட அவர், குழந்தை திருமணம் மற்றும் விதவைகள் துன்பம் மற்றும் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு எதிராகப் பேசினார். அவர் மருத்துவ பட்டம் பெற பிரிட்டனுக்குச் சென்றார். அவரது நண்பரான, மேற்கூறிய டாக்டர் ஆனந்தி ஜோஷியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அவரது கணவர் இறந்த பின்னர், புனேயில் ஆர்ய மகிளா சமாஜ்ஜை நிறுவினார். அவர் தனது வாழ்க்கை முழுதும் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், நாளடைவில், அவர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். ஏழு மொழிகளில் புலமை பெற்ற அவர், ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழிகளிலிருந்து மராத்தி மொழிக்குப் பைபிளை மொழிபெயர்த்தார்.
வீனஸ் கிரகத்தில் உள்ள எரிமலைமுகப்புகளுக்கு இந்தியப் பெண்மணிகளின் பெயர்வைத்துள்ளது இந்தியர்களுக்கு பெருமையான செய்தியாகும்.