டில்லி,

மிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மூன்று நாளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறி உள்ளார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வந்தது. சசிகலா முதல்வராக விரும்பி காய்களை நகற்றினார்.  அதைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் காரணமாக தமிழக முதல்வராக பதவியில் அமர முடிவு செய்தார்.

இதையடுத்து ஓபிஎஸ்-ஐ வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யச்சொல்லி கையெழுத்து பெறப்பட்டு, அந்த கடிதம் கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

இதன் காரணமாக ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக கட்சியின் அடி மட்ட தொண்டர்களும் 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உச்சநீதி மன்றத்தில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.

கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் ஆட்சி தலைமையின்றி அசாதாரண சூழல் உருவாகி உள்ளது. கவர்னரும் இதுவரை எந்தவித முடிவும் அறிவிக்காத நிலையில் தமிழக அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

இதுகுறித்து மத்தியஅரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறியதாவது,

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இன்னும் 2 அல்லது 3 நாளில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.

மேலும், தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநர் உத்தரவிடலாம். சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும்,

பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ள தலைவர் அடுத்த முதல்வராக பதவியேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.