சென்னை,

திமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தற்போதைய தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதாவால்  2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர்  அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

தற்போது, சசிகலா சிறைக்கு போவதால், அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்து, பதவி கொடுத்துள்ளார் சசிகலா.

அவர்கள் செய்த தவறுக்காக  நேரில் மன்னிப்பு கடிதம் அளித்ததாகவும், அதன் காரணமாக மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதாகவும் சசிகலா கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து இதற்கான அறிவிப்பு, கட்சி பத்திரிகையான நமது எம்ஜிஆரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நேற்று இரவு மன்னிப்பு கொடுத்ததும், இன்று அவர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது கட்சி விசுவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா இன்று சிறைக்கு செல்வதால், அவரது குடும்ப உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து ஒரு இரவுக்குள் அவர்களுக்கு கட்சி பதவி கொடுத்திருப்பது அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, தற்போது கூவத்தூரில் அடைபட்டு கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.