சென்னை:
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி இருப்பதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சட்டமன்றக்குழு தலைவராக அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் ஆளுநர் அமைதி காத்துவந்தார். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வர இருப்பதே அவரது மவுனத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வெளியான சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கு தலா நான்காண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து.
இதனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் நிற்க முடியாது, முதல்பதவி ஏற்க முடியாது. ஆகவே அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமியை, தங்களது சட்டமன்ற குழு தலைவராக இன்று மதியம் தேர்ந்தெடுத்தனர்.
இந்தத் தகவல் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை மாலை ஐந்து முப்பது மணிக்கு சந்திக்க ஆளுநர் அழைத்துள்ளார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, கூவத்தூர் ஓட்டலில் இருந்து, கிளம்பினார். அவருடன் அவருடன் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் ஆளுநரை சந்திக்க புறப்பட்டனர்.
இந்த சந்திப்பின்போது, ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோருவார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.