அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அவர் சார்பாக, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது. ஜெயலலிதாவின் நல்லாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த நல்லாட்சி தொடரும். எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி’ என்றார்.
இதனையடுத்து தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூவத்தூரில்தான் தற்போது சசிகலா இருக்கிறார். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவுப்படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஓ.பி.எஸ்ஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.