வாஷிங்டன்:

சர்ச்சைக்குரிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மிக்கேல் பிலின் ராஜினாமா செய்திருப்பது அதிபர் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் 20 ம் தேதி பதவியேற்றார். பாதுகாப்பு ஆலோசகர் மிக்கேல் பிலின், கடந்த டிசம்பர் மாதம் ரஷ்ய தூதர்  செர்கி கிஸ்ல்யாக்கிடம் அமெரிக்காவுக்கு எதிராக பலமுறை பேசியதாக விமர்சனம் எழுந்தது.

இந்த உரையாடல் மூலம் அவர், ட்ரம்ப் நிர்வாகத்தை தவறாக வழிநடத்திய விவகாரம் தற்போது வெளியில் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக துணை அதிபர் மைக் பென்ச் இதுகுறித்து குற்றச்சாட்டை எழுப்பினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மிக்கேல் பிலின் ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே 7 முஸ்லிம் நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வர அதிபர் ட்ரம்ப்   விதித்த தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியிருப்பது ட்ரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப்புக்கு ஆதரவாக மிக்கேல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.