“கூவத்தூர் சென்ற சசிகலா, அங்கு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அளிக்க கோடி கோடியாக பணக்கட்டுகளை எடுத்துச் சென்றார்” என்று கவர்னரிடம், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பியான மைத்ரேயன் புகார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் இன்று மாலை கவர்னரை சந்தித்தார். இது குறித்த செய்தியை பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.
கவர்னருக்கு பிறந்தநாள் என்பதால் ஓ.பி.எஸ். சார்பில் வாழ்த்து தெரிவிக்கவும், தங்கள் அணி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அச்சுறுத்தல் வருவதால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் கவர்னரை மைத்ரேயன் சந்தித்தாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன. இன்று இரண்டாவது முறையாக கூவத்தூர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க சசிகலா சென்றார். அப்போது கோடி கோடியாக பணக்கட்டுகளை அவர் எடுத்துச் சென்றாத மைத்ரேயன் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னரிடம் மைத்ரேயன், “இன்று சசிகலா கூவத்தூருக்கு மீண்டும் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் சென்றார்கள். இவர்களுக்கு சில கார்களே போதுமானது. பாதுகாப்புக்காக மேலும் சில கார்கள் செல்லலாம். ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கார் அணிவகுப்புடன் சசிகலா கூவத்தூருக்குச் சென்றார்.
இத்தனை கார்கள் எதற்கு? ஏற்கெனவே பலரும் கணிப்பது போல, அந்த கார்களில் கோடி கோடியாய் ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்று எம்.எல்.ஏக்களுக்கு அளித்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. வலுக்கட்டாயமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அந்த எம்.எல்.ஏக்களை வளைக்க இப்படி பணத்தைக் காட்டி மயக்க நினைக்கிறார்கள்.
அந்த எம்.எல்.ஏக்களில் கணிசமானவர்கள், ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்கும் முடிவில் இருக்கிறார்கள். அதனால்தான் அங்கிருப்பவர்களில் ஒரு சில எம்.எல்.ஏக்களை மட்டுமே செய்தியாளர்களிடம் பேச அனுமதிக்கிறார்கள்.
ஆகவே கூவத்தூர் ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களை மீட்க வேண்டும்” என்று கவர்னரிடம் மைத்ரேயன் புகார் மனு அளித்ததாக சொல்லப்படுகிறது.