சென்னை:
பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் வரும் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது.
வரும் புதன்கிழமை (15ந்தேதி) காலை 9.28 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து சி37 விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி வருகிறது.
ஏற்கனவே எக்ஸல் வகையை சேர்ந்த பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 27ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சில தொழில் நுட்ப கோளாறுகளால் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு வரும் 15ந்தேதி ஏவப்படுகிறது.
இந்நிலையில் கார்டோசாட்-2, துணை செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ்-1பி மற்றும் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் என 104 ெசயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் மூலம் வரும் 15ம் தேதி காலை 9.28 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கவுன்டவுன் இன்று காலை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் இந்தியாவின் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள்தான் முதன்மையானது. இதனுடன் ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ்-1பி என இரண்டு நானோ வகை செயற்கைக்கோளும் அனுப்பப்பட உள்ளது.
தவிர, அமெரிக்காவின் 96 துணைச் செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லேன்ட், சுவிஸ், அரபுநாடுகள் என தலா ஒரு செயற்கைகோள்கள் என மொத்தம் 101 வெளிநாட்டு செயற்கை கோள்கள் வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இலக்கை நோக்கி இஸ்ரோ : தற்போது பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட்மூலம் 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன் ரஷ்யா ஒரே ராக்கெட்மூலம் 37 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக உள்ளது. இந்த சாதனையை தற்போது இஸ்ரோ முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.