(அ.தி.மு.க.) எம்.எல்.ஏக்களில் பெரும்மானையானவர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார் அக் கட்சியின் பொதுச் செயலாளர். அதே கட்சியைச் சேர்ந்த (தற்போதைய) முதல்வர் ஓ.பி.எஸ்., தான் அளித்த ராஜினாமா கடிதம் மிரட்டப்பட்டு வாங்கப்பட்டதாகவும் அதை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோர், சசிகலாவின் கட்டுப்பாட்டில் நட்சத்திர ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிப்படையான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், “சட்டத்துக்குப் புறம்பாக அந்த எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்று புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்று காவல் நிலையங்களில் புகார் தெரிவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான ராமச்சந்திரனை காணவில்லை என்றும், அவரை சமூகவிரோதிகள் கடத்தி வைத்திருப்பார்களோ என அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி டி.எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், தொகுதி எம்.எல்..ஏ.வை காணவில்லை என்று அவர் சாரந்த அ.தி.மு.க. மாணவரணி செயலாளரே புகார் கொடுத்திருக்கிறார்.
எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, இந்த “காணவில்லை புகார்” பட்டியலில் அமைச்சரும் இருக்கிறார். ஆரணி தொகுதி எம்.எல்.ஏவும் அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை என்று அப்பகுதி டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல தொகுதிகளிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற சூழலில்.. அதாவது காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தால், இந்நேரம் எந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
ஆனால் இது போன்ற காணவில்லை புகார்களை காவல்துறை பொருட்படுத்தவே இல்லை. அதாவது புகாரை வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவதில்லை. வெறும் ரசீது கொடுப்பதோடு சரி.
பல புகார்களை கட்சிக்காரர்களோ, கட்சி சாராதவர்களோ கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவை காணவில்லை என்று அவரது கணவரே புகார் கொடுத்துள்ளார். அது மட்டுமல்ல. தனது மனைவியை காணவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
இதே போன்ற வழக்கை.. அதாவது பல எம்.எல்.ஏக்களை காணவில்லை என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி உட்பட சிலர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதில் அரசு வழக்கிறிஞர் சொன்ன பதில் கவனிக்கத்க்கது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவானன் அமர்வுக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக, அரசின் கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வி.எம். ராஜேந்திரன் ஆஜரானார்.
அவர், “இது போன்ற புகார்களில் உண்மையில்லை. எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக இருக்கிறார்கள்” என்றார். இதை . இதை நீதிபதிகளும் ஏற்றனர்.
நீதிபதிகள் ஏற்றது விசயமல்ல..
“சசிகலா தரப்பால் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று முதல்வர் ஓ.பி.எஸ். தரப்பு குற்றம்சாட்டும் நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் அதற்கு நேர்மாறான கருத்தை நீதிமன்றத்தில் வைக்கிறார்.
இன்னொரு தகவலும் உலவுகிறது.
காவல் அதிகாரிகள் சிலரை மாற்ற ஓ.பி.எஸ். உத்தரவிட்டதாகவும் அதை ஏற்க தமிழக டி.ஜி.பி. மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, நிர்வாகம் செய்ய முதன் முழு தேவையான காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள், முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், சசிகலாவுக்கே சாதகமாக இருக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.
ஆக, சசிகலா இப்போதே முதல்வராகி விட்டாரோ என்றும் நினைக்கவேண்டியிருக்கிறது!