சென்னை,

நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ் அளித்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக, இன்று மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் நடைபெற்று வரும் செயல்கள் குறித்தும், சசிகலாவுக்கு எதிராகவும் பல அதிரட கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் மக்கள் விரும்பினால், ராஜினாமாவை வாபஸ் வாங்கிவிட்டு, தானே முதல்வராக தொடருவேன் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே அதிமுக அடிமட்ட தொண்டர்கள் யாரும் சசிகலா பதவிக்கு வருவதை விரும்பாத நிலையில், ஓபிஎஸ்-ன் இந்த அதிரடி அறிவிப்பு  அதிமுக தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்து, அதிமுக முக்கிய தலைவர்கள், மற்றும் மைத்ரேயன் எம்.பி போன்றோர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் அதிமுக தொண்டர்கள் தங்களது ஆர்வத்தால் முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர்.

நள்ளிரவு முதலே அதிமுக தொண்டர்களும்,  பெண்களும்  ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக அவரது வீட்டு முன் கோஷ மிட்டனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தொண்டர்கள் சென்னை நோக்கி திரண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தமிழக எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்களை அனைவரும் தற்போது  சசிகலா தரப்பினால் சிறை வைக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது.

இன்று மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிற நிலையில், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அமைச்சர்களும், கட்சி பதவியில் இருப்பவர்களும் மட்டும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் ,  அதிமுக அடிமட்ட தொண்டர்கள் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவும்  கோஷமிட்டு வருகின்றனர்.