சென்னை,

ண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 29ந்தேதி  கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் வழியாக ஏற்றி இறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக எண்ணூர் துறைமுகம் அருகே சரக்குகளை ஏற்றி இறக்க பல கப்பல்கள் எப்போதும் அணிவகுத்து நிற்கும்.

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் எண்ணெய் (ஏச்எப்ஓ எனப்படும் கனரக ஆயில்) ஏற்றி வந்த ஆயில் டேங்கர்  கப்பலுடன், துறைமுகத்தில் சரக்கு இறக்கிவிட்டு சென்ற மற்றொரு எல்பிஜி சரக்கு கப்பலுடன்  லேசாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆயில் டேங்கர் கப்பலில் உள்ள ஆயில் டேங்கர் உடைந்து அதனுள் இருந்த  எண்ணை கடலில் கலந்தது. தற்போது அது கடல் நீரில் கலந்து, கடல்நீர் கருப்பு கலராக மாறி கடுமையாக மாசடைந்துள்ளது.

கடல் முழுவதும் எண்ணை படலமாக மிதக்கிறது. எண்ணூரில் ஆரம்பமான இந்த எண்ணை படலமானது சென்னை திருவான்மியூரை அடுத்த பாலவாக்கம் வரையில் சுமார் 32 மைல் தூரம் உள்ள படல் பகுதியில் விரிந்து காணப்படுகிறது.

இந்த பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஆயில் படிவங்கள் ஒதுங்குவதால் கடற்கரை முழுவதும் கருப்பாக காணப்படுகிறது.

கடல் வாழ் உயிரினங்களான ஆமை, மீன், நண்டு போன்றவைகள் இறந்து ஒதுங்குகிறது.

கடலில் கலந்துள்ள எண்ணை படலத்தை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக இந்தியன் கடற்படை ஐ.ஜி. ஜூகல் புரோகித் தெரிவித்து உள்ளளார்.

கடற்படை வீரர்களுடன் தன்னார்வ தொண்டர்களும் சேர்ந்து சுமார் 750 பேர் எண்ணை படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், தற்போதுவரை 70 டன் அளவு ஆயில் படலம்  அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கடலில் படிந்துள்ள ஆயில் படலத்தை முழுவதுமாக அகற்ற குறைந்தது 10 முதல் 12 நாட்கள் ஆகும் என்றும், இரவு பகல் பாராது ஆயில் படலத்தை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் இந்திய கடலோர காவல்படை அதிகாரி கூறி உள்ளார்.