“48 ஆயிரம் டாலர்கள் வரை , ஊழல் செய்தால் சிறை தண்டனை கிடையது” என்று சமீபத்தில் ருமேனிய அரசு சட்டம் இயற்றியது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதே நேரம் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் மக்களின் உணர்வை ருமேனிய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் குறிப்பிட்ட சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ருமேனிய தலைநகர் பூகாரெஸ்ட்டில் பெரும் பேரணி நடந்தது. இதில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பேரணியில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பேரணியில், “ஊழலை ஆதரிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெறு” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரணியைத் தடுக்க காவலர்கள் பெருமுயற்சி எடுத்தும் இயலவில்லை. இந்த நிலையில், போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, “ருமேனியாவின் சர்வதேச அளவிலான நற்பெயர் கெட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ கூட்டணி நாடுகளுடன் உள்ள ருமேனியாவின் உறவுகள் அபாய நிலையில் இருக்கின்றன” என்று ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க உள்பட ஆறு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.