அத்தியாயம்: 8

சர்மிஷ்டை

 சர்மிஷ்டை இப்படி அலங்காரம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஓடுகிற நதியின் உற்சாகத்துடன் பட்டாம்பூச்சியைப் போல் குருஷேத்திர வீதியெங்கும் சுற்றித் திரிந்த காலத்தில் பண்ணிய அலங்காரம்.

தந்தை பார்த்து மகிழ ஒரு அலங்காரம், தாய் பார்த்து ரசிக்க ஒரு அலங்காரம், தனக்காக ஒரு அலங்காரம் என்று பொழுதெல்லாம் அலங்கார தேவதையாய் வலம் வந்தவள்.

தேவயானிக்கு அடிமையானதிலிருந்து சகலமும் மாறிப்போயிற்று.  அரசன் மகளாய்ப் பிறந்து . சேடிகளுக்குக் கட்டளையிட்டே பழக்கப்பட்டவள் ஏவலுக்கு ஆளாகிவிட்டாள்.  அதுவும் தந்தை விருஷபர்வாவிடம் கைநீட்டி யாசகம் பெறுகிற முனிவனின் மகளுக்கு அடிமையாகிவிட்டாள்.

சர்மிஷ்டையை தேவயானிக்கு அடிமையாக தாரை வார்த்துத் தரும்போது நா தழுதழுக்க விஷபர்வா சொன்னதுபோல் இது எழுதப்பட்ட விதியல்ல,  பயம். முனிவன் சபித்துவிடுவானோ என்கிற பயம்.

‘அரசனே, நீ எரிந்து சாம்பலாகப் போ’ என்று சபித்தால்கூட சாம்பலாகிவிடலாம்.  நாட்டையே சபித்து விட்டால் – குடிமக்கள் திண்டாடி விடுவார்களே என்ற பயம்.

‘மன்னா நீ பூனையாகப் போவாய், குடிகள் எலியாக மாறட்டும்.  இதுவரை மக்களைக் காத்து வந்த நீயே எலி பிடித்துத் தின்று அவர்களுக்கு எமனாகிவிடு’ என்று சபித்துவிட்டால் என்ன செய்ய முடியும்?

வில்லெடுத்து போருக்கு வந்தால் – எதிர்கொண்டு போரிடலாம்.  காவிக்குப் பின்னே ஒளிந்துக் கொண்டு வருபவனை என்ன செய்வது?

சுக்ராச்சார்யார் நல்லவர்தான்.  அசுரர்கள் நலனுக்காகவே பூலோகத்தில் வாழ்கிறவர்.  இப்போது அவர் விரும்பினாலும் பிரகஸ்பதிக்கு நிகரான மரியாதையைத் தரத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.  தேவர்கள்.

அப்படிப்பட்டவர் உன் மகள் சர்மிஷ்டையை என் பெண் தேவயானிக்கு அடிமையாக்காவிட்டால் உன் வம்சத்தையே சபித்துவிடுவேன் என்றதற்குக் காரணம் பிள்ளைப்பாசம்.  மகள் தேவயானி மேல் கொண்டிருந்த கண்மூடித்தனமான பாசம்.

தேவயானி மனசு நோகக்கூடாது என்பதற்காக அவர் எதைச் செய்வதற்கும் தயாராக இருந்தார்.  இல்லையென்றால் தேவர்களை கூண்டோடு அழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் எடுத்தவர் – பிரகஸ்பதியின் மகன் கசனுக்கு சஞ்சீவினி வித்தையைக் கற்றுக் கொடுத்திருப்பாரா?

கசன் – பூலோகத்துக்கு வந்து சுக்ராச்சார்யாரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தது இறந்த உயிர்களைக் காப்பாற்றும் சஞ்சீவினி வித்தையைக் கற்பதற்காகத்தான் என்பது தெரிந்ததும் அவனைத் துரத்தத் தயாராகிவிட்டிருந்தார்.

அதற்குள் தேவயானியின் மனசு கசன்மேல் வசப்பட்டிருந்தது.  மகள் முகம் வாடி விடக்கூடாது என்பதற்காகத்தானே தொடர்ந்து சிஷ்யனாக வைத்துக் கொண்டார்.

அசுரர்கள் கசனை அழித்துவிட கங்கணம் கட்டி – அத்தனை முயற்சியிலும் தோற்று – கடைசியாக கசனை எரித்துச் சாம்பலாக்கி, மதுவில் கலந்து, சுக்ராச்சார்யாருக்கே தந்துவிட்டனர்.

அன்று மாடு மேய்க்கப்போன கசன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.  தேவயானி, தந்தையிடம் புலம்பினாள்.

சுக்ராச்சார்யார் ஞான திருஷ்டியால் அறிந்து “கசனை இனி நீ பார்க்க முடியாது மகளே … அவன் என் வயிற்றுக்குள் சமாதியாகிவிட்டான்” என்றார்.

“அவன் இல்லை என்றால் எனக்குச் சுகமில்லை தந்தையே.  அவனை எனக்குத் தந்துவிடுங்கள்.. ” என்று புலம்பினாள் தேவயானி.  தன்  உயிரைத் துச்சமாக மதித்து, கசனுக்கு சஞ்சீவினி வித்தை கற்றுத் தந்து வயிற்றைக் கிழித்து வெளிவரச் செய்யவில்லையா?

தன்னையே துச்சமாக மதித்த சுக்ராச்சார்யார் சர்மிஷ்டையின் உணர்வுக்கு மதிப்பு தருவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியம்?

சுக்ராச்சார்யார் ஒன்று செய்திருக்கலாம்.  “சர்மிஷ்டை பொய் சொல்லவில்லை  தேவயானி.  நான் அவள் தந்தையிடம் கைநீட்டி யாசகம் பெறுபவன்தான்.  இப்போது நீ கட்டியிருக்கும் ஆடை கூட விருஷபர்வா எனக்குக் குரு காணிக்கையாகத் தந்ததுதான்’ என்று சொல்லியிருக்கலாம்.  பிரச்சனை இந்த அளவு பெரிதாகியிருக்காது.

இத்தனை பிரச்சனையும் ஆடையால் வந்ததுதான்.   சர்மிஷ்டை, தேவயானி யின் ஆடையை எடுத்து உடுத்த வில்லை என்றால் தோழிகளாய் இருந்து நீராடிக் கொண்டிருந்த இருவருக்குள்ளும் பகை வளர்ந்திருக்காது.  இந்திரன் நீராடிக் கொண்டிருந்த இருவருடைய ஆடையையும் எந்த நோக்கத்துக்காக இடம் மாற்றினானோ?

சர்மிஷ்டை தேவயானியின் ஆடையை எடுத்து உடுத்த,  ‘என் ஆடையை நீ எப்படி உடுத்துவாய்’ என்று தேவயானி கேட்க – ‘நான் போடுகிற யாசகத்தில் வாழ்கிற நீ என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா’ என்று சர்மிஷ்டை சாட – இருவரும் போர்ச் சேவல்போல் சிலிர்த்துக் கொண்டார்கள்.

சர்மிஷ்டை – அரசன் மகள் – வீர விளையாட்டுகள் தெரிந்தவள்.  தேவயானியை கிணற்றுற்குள் தள்ளிவிட்டு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டாள்.  அவளை என் அடிமையாக்குகிறேன்’ என்று கிணற்றுக்குள்ளிருந்து சபதம் எடுத்தாள் தேவயானி.

சபதம் நிறைவேறிற்று.  சர்மிஷ்டை அடிமையாவிட்டாள்.

சர்மிஷ்டையோடு அவள் தோழியர் ஆயிரம் பேரும் தேவயானிக்கு அடிமையாயினர்.  தேவயானிக்குக் கால் பிடித்து விடுவதும் – தேவயானி வேண்டுமென்றே கலைத்துப் போடும் ஆடைகளைச் சலவை செய்து அடுக்குவதும் – கூந்தலுக்கு நெய் தடவி விடுவதும், குளிக்க அரப்பு தேய்ப்பதும் சர்மிஷ்டை செய்ய வேண்டிய வேலைகளில் அடங்கும்.

ஆஸ்ரமப் பசு கன்று ஈன்றிற்று.

அடுத்தநாள் மாலை.

குபேரனது உத்தியான வனத்துக்கு ஒப்பான சோலையில் சந்தன மரத்தடியில், தோகை விரித்தா டும் மயிலின் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கிறாள் தேவயானி.  மாலை மஞ்சள் வெயிலின் நிறத்திலிருந்து அவள் கால்களை வலிக்காமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள்  சர்மிஷ்டை.

எதைத் கண்டோ பயந்து மிரட்சியுடன் ஓடிவருகிறது ஒரு மான்.  அதைப் பார்த்த தேவயானி “சர்மிஷ்டை, அதை பிடித்து வா” என்கிறாள்.

சொல்பவள் எஜமானி… ஆடை நழுவுகிறதே – காலுக்குள் கருவேல முள் பூறுகிறதே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா..?

எழுந்து மானைப் பிடிக்க ஓடுகிறாள்.  அந்த மான் சர்மிஷ்டைக்குப் பரிட்சயமான மான். ‘அடைக்கலம் நீயே’ என்பது போல் – அவளிடத்தில் தஞ்சமடைந்தது.

மானோடு திரும்பிக் கொண்டிருக்கிறாள்.  தூரத்திலே கம்பீரமாக வருகிறான் ஒரு ஆண் மகன், மானைப் பார்க்கிறாள் சர்மிஷ்டை, இதற்காகத்தான் பயந்தாயா’ என்பதுபோல்.

தேவயானி மானை மடியில் வைத்துக் கொஞ்சுகிறாள்.  சர்மிஷ்டை எதிரில் நின்று கொண்டி ருக்கிறாள்.  ‘ம் நடக்கட்டும்’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மானோடு விளையாட்டைத் தொடர்கிறாள் தேவயானி.

சர்மிஷ்டை மீண்டும் தேவயானியின் கால்களைப் பிடித்துவிடும் வேலையில் ஈடுபடுகிறாள்.

‘இது நான் குறி வைத்த மான்’ என்று சொல்லிக் கொண்டே அருகில் வருகிறான் யயாதி.  அவன் கண்கள் ஒரே நேரத்தில் தேவயானியை, அந்த மானை, சர்மிஷ்டையைப் பார்க்கின்றன.  பிறகு அந்தக் கண்கள் இரண்டும் சர்மிஷ்டை மீது மையம் கொண்டு விட்டன.

சர்மிஷ்டை தேவயானியைப்போல் பகட்டு ஆடை உடுத்தி, கூந்தலுக்கு நெய் தடவி, மலர் அலங்காரம் எதுவும் செய்திருக்கவில்லை.  எந்த தேசத்தில் அடிமைகளுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறார்கள்?

அலங்காரம் செய்தால்தானா? வண்டுக்கு ஜலதோஷம் பிடித்தால், பூ மலர்ந்த சேதி தெரியாமலா போய்விடு கிறது? துலக்கி வைத்த பித்தளை விளக்கும் தூசு படிந்த தங்கத் தட்டும் தட்டானுக்கு வித்தியாசம் தெரியாமல் போதில்லையே! யயாதியின் கண்கள் சர்மிஷ்டையை ஆராதித்துக் கொண்டே இருக்கின்றன.

அழகான ஆண் மகன் – இமைக்காமல் அருகிலிருப்பவளையே பார்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்.  தன்னைவிட அருகிலிருப்பவள் அவனைக் கவர்ந்துவிட்டாள் என்றுதானே! “சர்மிஷ்டை, இன்னும் சற்று இதமாய் பிடியடி” என்கிறாள் தேவயானி.

“தோழியர்களுக்குள் நடிப்பு அபாரம்! அரசன் மகள் அடிமைபோல் நடிக்கிறாள். அடிமை மகாராணிபோல் நாட்டாமை பண்ணுகிறாள். பலே!” என்கிறான் யயாதி.

“நான் அடிமையா? நான் யார் தெரியுமா? அசுரர் குரு சுக்ராச்சார்யாரின் மகள்.  இவள் சர்மிஷ்டை.  என் அடிமை.  மன்னன் விருஷபர்வாவின் மகள்.”

“நான் அரசன் மகள் என்று நினைத்தது சரிதான்!”

தலை நிமிர்த்தி யயாதி முகத்தை முழுமையாய் பார்க்கிறாள் சர்மிஷ்டை. என்ன ஆகிருதி.

“என்னை ஞாபகம் இருக்கிறதா மன்னரே? முன்பொரு முறை என்னைக் கிணற்றிலிருந்து காப்பாற்றினீர்கள்.  என் வலது கையைப் பற்றித் தூக்கி விட்டீர்கள்.  அன்றிலிருந்து உம்மை என் கணவனாக நினைத்து உமக்காகத்தான் இத்தனை நாளும் காத்திருக்கிறேன்” என்றாள் தேவயானி.

“ஆனால் என் மனம் இவளையல்லவா என் தேவியாக நினைக்கிறது..” என்று சர்மிஷ்டையை காட்டிச் சொல்கிறான் யயாதி.

“யஜமானி நானே உமக்காக என்றிருக்கும்போது, அடிமையை நாடுகிறேன் என்கிறீர்கள்.  நல்ல வேடிக்கை!   இந்த தேவயானி இதுவரை நினைத்தது எதையும் நிறைவேற்றாமல் தோற்றதில்லை.  உம் விஷயத்திலும் தோற்கமாட்டேன்..”

‘யயாதியை உன் சபதம் ஒன்றும் செய்துவிடாது தேவயானி.  சுடுகிற சூரியனையே குளிராக்கும் சந்திர வம்சத்தவன் நான் என்பது நினைவிருக்கட்டும்.”

“நானும் அசுரர்களின் குரு சுக்ராச்சார்யாரின் மகள் என்பதை மறந்து விட வேண்டாம்.  நான் நினைத்தால் என் தந்தையைக் கொண்டு இந்த பூலோகத்தையே சுடுகாடாக்கிவிட முடியும்.  உமக்குத் தேவை என் காலகளை பிடிக்கும் இந்த அடிமையா? இல்லை பூலோக உயிர்களின் நலனா என்பதை நீரே முடிவு செய்யும்.

சொல்லிவிட்டு கம்பீரமாய் எழுந்து நடக்கிறாள் தேவயானி.  அவள் நடையிலே ஒரு திமிர்த்தனம் இப்போதும் இருக்கவே செய்கிறது.  அவள் பின்னால் நாணிச் செல்லும் சர்மிஷ்டையை ஏக்கத்துடன் பார்க்கிறான் யயாதி.  தாய் மந்தியின் மடியை நழுவ விட்ட குரங்குக் குட்டியின் மனநிலையில் அவன் இருந்தான்.

‘அடிமைகள் பல்லக்கு சுமக்க – அதனுள் அமர்ந்து வரும் தேவயானி, நிலம் அதிர நடந்து வருகிறாள் என்றால் மகள் ஏதோ கோபத்தில் வருகிறாள்.  நாம் சாபம் தர தயாராக வேண்டும்’ என்பது சுக்ராச்சார்யார்க்குத் தெரியும்.  தயார்படுத்திக் கொண்டே, “என்ன நடந்தது தேவயானி?”  என்று கேட்கிறார்.

“மன்னன் யயாதிடம் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன் தந்தையே.  என் காதலை வெளிப்படுத்தினேன்.  அவர் உதாசீனப்படுத்திவிட்டார்.  நான் அவர் மனைவியாக வேண்டும்…

“நீ யயாதியின் மனைவியானால் கசன் இட்ட சாபம் பலித்துவிடுமே?”

சுக்ராச்சார்யார் சொன்ன பிறகுதான் கசன் சாபமிட்ட சம்பவத்தை நினைக்கிறாள்.  கசன் பூலோகத்துக்கு வந்த வேலையை முடித்துவிட்டு – சஞ்சீவினி வித்தையைக் கற்க – தேவலோகம் புறப்படுகிறான்.

தேவயானி, ‘என்னையும் உன்னுடனே அழைத்துச் செல்’ என்கிறாள்.  கசன், “நானும் உன் தந்தை வயிற்றில் இருந்துவிட்டேன்.  எனவே நீ எனக்கு சகோதரி முறை’ என்கிறான்.  காதல் நாயகன் கை நழுவிப் போகிற கோபத்தில், “நீ கற்ற வித்தை உனக்குப் பலிக்காது” என்கிறாள்.  கசனும் தன் பங்குக்கு, ‘அந்தணர் மரபில் வந்த நீ சத்திரியனைத்தான் மணாளனாய் பெறப்போகிறாய்” என்று சபிக்கிறான்.

‘சாபம் பலித்துவிடும் போலிருக்கிறதே… சாபம் பலித்தால் கசனிடம் தோற்றது போலாகிவிடுமே..!’ யோசிக்கிறாள்  – ஒரு இமைப்பொழுதுதான், யயாதிக்காக – அவனுடைய திரண்ட தோளுக்கும் , பரந்த மார்புக்கும் அவள் தோற்பதற்குத் துணிந்தாள்.

“எனக்கு யயாதி வேண்டும் தந்தையே..”

“வாங்கித் தருகிறேன்..

மஞ்சத்திலே யயாதி அமர்ந்திருக்கிறான்.  அவன் மடியிலே சரிந்து கிடக்கிறாள் தேவயானி. அவள் கூந்தலும் ஆடையும் கண்டபடி கலைந்து கிடக்கின்றன.  அவள் உடம்பிலே மஞ்சள் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.

தேவயானியின் வாய், ‘நான் உமது அடிமை.. நான் உமது அடிமை’ என்று பிதற்றுகிறது.  யயாதி அவசரமே காட்டாமல், அவள் உணர்ச்சிகளுக்கு நெய் வார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவனிடத்தில் காதல் இல்லை.  காமம் இல்லை.  சுக்ராச்சார்யார் தாடியைத் தடவிக் கொண்டே அவன் முன் வந்து, மகளின் காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாசித்த காட்சியும், ‘நீ மறுத்தால் சபிப்பேன்’ என்று ஆவேசப்பட்ட காட்சியும் விரிகிறது.

கருங்காலி மரத் தண்டைவிட உறுதியான அவன் கைகளுக்குள் தேவயானி பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.  தேவயானியின் எலும்பு நொறுங்கும் அளவுக்கு அழுத்திப் பிடிக்கிறான்.

‘இன்னும் இறுக்கி என் எலும்புகளை நொறுக்கிவிடேன்’ என்கிறாள் தேவயானி.

அப்பாலே போவென்று மஞ்சத்தில் எறிகிறான்.  சுவரில் எறிந்த பந்துபோல் அவள் உடனே வந்து ஒட்டிக் கொள்கிறாள்.  தேவயானியைத் தவிக்க வைத்து துடிக்கச் செய்து.. கடைசியில் தூங்கவும் வைத்து விடுகிறான் – அது கணவனில் தார்மீகக் கடமை.

அரண்மனை அந்தப்புரத்திலே சர்மிஷ்டையைக் குடி வைத்தால் தனக்கு சக்களத்தியாகி விடுவாள் என்ற பயம் தேவயானிக்கு.  அசோக வனிகை என்ற சோலையிலே கொண்டு வைக்கிறாள். யயாதியின் முன்னே வரக்கூடாது என்பது உத்தரவு.

திருமணமாகிப் போகும்போது சர்மிஷ்டையை விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும்.  ஆயுசுக்கும் தனக்கு அடிமையாய் சர்மிஷ்டை இருக்க வேண்டும் என்றஆசை – அவளையும் கூடவே கூட்டி வந்தாள்.  இன்னொரு காரணமும் அதற்க இருந்தது.  யயாதி மேல்  சர்மிஷ்டை காதலாக இருக்கிற விஷயத்தை தேவயானி அறிவாள்.  தன்னால்¢ காதலிக்கப்பட்டவனுடன், இன்னொரு பெண் இன்பமாக இருப்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? நெருப்புமேலே நிற்க வைத்ததுபோல் துடிக்கமாட்டாளா?- அப்படி துடிக்க வைக்கத்தான் சர்மிஷ்டையை கூடவே அழைத்து வந்தாள்.!

அப்படியும் தேவயானிக்கு மனசு அடங்கவில்லை.  தோழிகளோடு சோலையில் இருக்கும்போது அடிமைகளுக்கு  ஆளுக்கொரு வேலையை ஏவிவிட்டு – சர்மிஷ்டைக்கு கேட்கும் குரலில், கலவி மயக்கத்தில் நடந்த மொழிகளைக் கூச்சமில்லாமல் மான்களிடம் பேசுவதுபோல் கூறுவாள்.

“மான்களே, இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்கும் தலைவணங்காத தேவயானி – மன்னன் யயாதியிடம் ‘நான் உன் அடிமை’ என்று மனசு ஒப்பச் சொல்லியிருக்கிறாள் என்றால் அவன் ஆண்மையில் ஆளுமை எப்படிப்பட்டதென்று நினைத்துக் கொள்ளுங்களேன்.

அவர் மஞ்சத்துக்கு வந்துவிட்டால் வேகத்தில் சிட்டுக்குருவி –  வீரியத்தில் யானை – அவர் மன்மதனுக்கே பாடம் நடத்தலாம்.  அத்தனை வல்லவர்.”

சொல்லும்போது சர்மிஷ்டையின் முக பாவத்தைக் கவனிக்கத்தான் செய்கிறாள்.  அவள் முகம்  இறுகிப்போய்-எந்த உணர்ச்சியையும் காட்டுவதில்லை.

ஆனால் உள்ளுக்குள் ஓராயிரம் உணர்ச்சி மோதல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதும், தொடர்பற்றதுமான நினைவுகள் நெருக்கியடித்து எழுகின்றன.

தந்தை விருஷபர்வா அவளிடம் எப்போதோ ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது.  ‘சர்மிஷ்டை, அரசனுக்கு அழகு அடிமைகளை அதிகம் பெற்றிருப்பது.  அடிமைகளை அடிமைப்படுத்துவது வீரம்!  அடிமைகளுக்கு எவன் அரசனோ அவனை அடிமைப்படுத்துவது விவேகம்.  பாராளும் மன்னனுக்கு தேவை விவேகம்.

அப்படியானால் – தேவயானி யயாதிக்கு அடிமை.  யயாதியைத் தனக்கு அடிமையாக்கிவிட்டால்..

களுக்கென்று நகைக்கிறாள் சர்மிஷ்டை.

தேவயானிக்கு அடிமையான பிறகு சர்மிஷ்டை முதன் முறையாக இப்போதுதான் சிரிக்கிறாள்.

இதை கவனித்த தேவயானி, “என்ன கண்டுவிட்டாய் சர்மிஷ்டை?” என்று கேட்கிறாள்.

“காட்டுகிறேன்” என்றாள் சர்மிஷ்டை..

அலங்காரம் முடித்து சர்மிஷ்டை.  கணிகையைப் போல் நடந்து – குடில் முன்னே மகிழ மரத்தடியில் அமர்கிறாள்.

கூந்தலை அள்ளிச் செருகி – மார்பில் சந்தனம் குழைத்துத் தடவி – மரிக்கொழுந்து சூடி – செம்பஞ்சுக்கு குழம்பு பூசி யயாதியின் மனசில் இன்று மாலை பற்ற வைத்த நெருப்பை அணைக்கும் குளிர் புனலாக அமர்ந்திருக்கிறாள்.

சர்மிஷ்டை அமர்ந்திருக்கும் அந்தக் கம்பீரமும், யௌவனத் திரட்சியும்..  ஆ! அவளொரு அதிசியம்.. என்கிறது.

இன்று வேண்டுமென்றேதான் யயாதி உலாத்துகிற நதிக்கரை பக்கமாய் போனாள் – இனிப்பாய் ஒரு புன்னகையும் சிந்தியாகிவிட்டது.  மொய்க்க வராமல் எறும்பு எங்கே போய்விடும்?

காத்திருந்தாள்.

தேவயானியிடம் நகர்வலம் போவதாகப் பொய் சொல்லிவிட்டு அசோக வனிகை வந்தடைந்தான் யயாதி.

“சர்மிஷ்டை” என்றான் அன்பொழுக.

‘இத்தனை அலங்காரமும்  நீர் கலைப்பதற்காகத்தான் என்பதுபோல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.  பக்கத்தில் இருந்த தாம்பூலத் தட்டை மடியில் வைத்து சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தாள்.

மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் – சர்மிஷ்டை அழகுக்கு மயங்கிய யயாதி அவள் அருகில் அமர்ந்தான்.  இதற்காகத்தான் காத்திருப்பதுபோல் வித்தை காட்டினாள் சர்மிஷ்டை.  விதிர்விதிர்த்து போன யயாதி அவள் மார்பில் சாய்ந்தபடியே, “நான் உன் அடிமை.  நான் உன் அடிமை” என்றான்.

“தேவயானி உமக்கடிமை.  நீர் எனக்கடிமை.  உமக்கு அடிமையானவர்கள் அத்தனை பேரும் இனி எனக்கும் அடிமை” என்றாள்.  மடித்த தாம்பூலத்தை யயாதி வாயில் புகட்டியவாறே!

யயாதி தாம்பூலம் மென்று கொண்டிருந்தான்.  அந்தக் காட்சி ‘ஆமாம் ஆமாம்’     என்பதுபோல் அந்த நிலவொளியில் தெரிந்தது.!