மேகாலயா,
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல்நல பாதிப்பால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உயிரை காப்பாற்ற எந்தவித முயற்சியும் செய்யாமல் அலட்சியமாக தூங்க போனார் சண்முகநாதன் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாரதியஜனதா அரசு பதவியேற்றதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அவர், கவர்னர் தங்கியுள்ள ராஜ்பவன் ஊழியர்களிடம் சில்மிசம் செய்வதாக கவர்னர் மாளிகை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று சண்முகநாதன் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.
கவர்னராக இருந்தபோது சண்முகநாதன் கவர்னர் மாளிகையை எப்படியெல்லாம் உபயோகப் படுத்தினார் என பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சண்முகநாதன் மீது, கவர்னர் மாளிகை ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து 5 பக்க கடிதத்தை ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது,
கவர்னர் மாளிகையை இளம்பெண்கள் கிளப்பாக மாற்றி இருந்தார். எப்போதும் அவரது படுக்கை அறை இளம்பெண்களால் சூழப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அப்துல்கலாம் விரைவுரை ஆற்றியபோது மாரடைப்பு ஏற்பட்டு ஷில்லாங்கில் பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து நாங்கள் கவர்னர் சண்முகநாதனிடம் எடுத்துரைத்தோம். உடனே மருத்துவமனை சென்று தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கோரினோம். ஆனால், அவர் படுக்கை அறைக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்.
பின்னர் பிரதமர் போன் செய்து, உடனே மருத்துவமனைக்கு சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட பின்னரே சண்முகநாதன் மருத்துவமனைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவையே தலைநிமிர வைத்து தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காப்பாற்ற, தமிழகத்தை சேர்ந்த ஒரு கவர்னர் அருகிலிருந்தும், முயற்சி செய்யாதது தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே அப்துல்கலாம் இறந்த நேரத்தில், அப்துல்கலாமின் கடைசி நிமிடங்களில் தாமும் உடன் இருந்ததாக சண்முகநாதன் பொய் கூறி வந்தது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.