சென்னை,
தமிழகத்தில் வறட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று மத்திய குழு அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகத்தில் போதிய மழை இல்லாமலும், தென்கிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் வேதனை தாங்காமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.
இதனையடுத்து வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவித்தார் முதல்வர் ஓபிஎஸ்.
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் தமிழகத்தில் நீடித்துவரும் வறட்சி நிலையை சமாளிக்கவும் ‘வர்தா’ புயல் பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியுதவியாக ரூ.39,565 கோடி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதன் காரணமாக தமிழக வறட்சியை பார்வையிட மத்திய அரசு 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் வசுதா மிஸ்ரா இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவினர் கடந்த 21ம் தேதி தமிழகம் வந்தனர். தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 மாவட்டங்களை பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழுவானது இன்று வரை (24ந்தேதிவரை) ஆய்வு நடத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 16,682 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 1564 கிராமங்கள் 87 சதவீதம் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேல், வறட்சி பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது மத்திய குழுவினர் சிறுசிறு குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வுக்கு பிறகு அனைத்து குழுவினரும் அறிக்கையை ஆய்வு செய்து ஒரே அறிக்கையாக மத்திய அரசிடம் அறிக்கை கொடுப்பார்கள்.
இதுகுறித்து மத்திய குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தமிழகத்தில் வறட்சி என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகியுள்ளது என்றனர்.
அவர்களிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர்கள் கருகியது தொடர்பாக விளக்கமாக எடுத்துரைத்தனர். தங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உருக்கமாக கூறினார்.
மேலும் வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
எற்கனவே னவே தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.