சென்னை: அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத (வி.கே. சசிகலாவின் உறவினர்) மன்னார்குடி திவாகரன் கட்சியை கட்டி காப்பதுபோல் பேசுவதா என்று அ.தி.மு.க.வின் நீண்ட நாள் உறுப்பினர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவரான நடராஜன், வழக்கம்போல இந்த வருடமும் பொங்கல் விழஆவை தஞ்சாவூரில் நடத்தி வருகிறார். அதில் பேசிய சசிகலாவின் உறவினர் திவாகரன் அ.தி.மு.க.வை நடராஜன், தான் உட்பட மன்னார்குடி குடும்பத்தினர் கட்டிக் காப்பதாக பேசினார்.
சசிகலா குடும்பத்தினர் மீது அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இரண்டாம் கட்ட தலைவர்களும் வேறு வழியின்றி சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் இப்படிப் பேசுவதா, என்று அதிமுக மூத்த தலைவர்கள் குமுறினார்கள்.
இவர்களில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வெளிப்படையாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரன் கட்சியை கட்டி காப்பது போல பேசியிருப்பது கொதிப்படையச் செய்கிறது. திவாகரனை சசிகலா கட்டுப்படுத்த வேண்டும்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது சசிகலாவுக்கு எதிராகவே சவால் விட்டதைப்போலத்தான் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆக, அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக குமைந்துகொண்டிருந்தவர்கள் இனி வெடிக்கக்கூடும். இதனால் அதிமுகவில் கலகம் உண்டாகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.