சென்னை:

தை பொங்கல் தினத்தன்று சென்னையில் ‘துக்ளக்’ வார இதழின் ஆண்டுவிழா நடைபெறும். அதில் கலந்து கொண்டு அப்பத்திரிக்கையின் ஆசிரியர் சோ உரையாற்றுவார். வாசகர்கள் முன்கூட்டியே எழுதி அனுப்பும் கேள்விகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து பதிலும் அளிப்பார்.

கடந்த மாதம் அவர் மறைந்து விட்ட நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் 47ஆவது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் துக்ளக் இதழின் தற்போதைய ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

விழா அரங்கின் வெளியில் ரஜினி ரசிகர்கள் பலரும், “நாளைய முதல்வரே..” என்று ரஜினி படத்துடன் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். பிரம்மாண்டமான பேனர்களும்  வைத்திருந்தனர்..

இந்த நிகழ்ச்சியில், தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், துக்ளக் சோ உடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.  பிறகு ஜெயலலிதாவுக்கும் சோவுக்கும்  இடையேயான நட்பை பற்றி பேசினார்.

மேலும் அவர், “சோ இல்லாத  இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை. இன்று. அவரது வாசகர்கள் மத்தியில் நின்று பேசுகிறேன்.

சோ மாதிரி அறிவாளியான ஒருவர் எனக்கு நண்பராக கிடைத்தது எனது பாக்கியம். சிங்கம் போல இருந்த அவரை உடல் நலமில்லாத நிலையில் பார்த்த போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

சோ சிறந்த அறிவாளி, சில நேரங்களில் அப்பாவியாக பேசுவார்.  சோவிடம் வந்து ஆலோசனை கேட்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லையென்று கூறிவிடலாம். மோடி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும் சிக்கலான விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்டு வந்தார்கள்.  அவர் என்றுமே பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததில்லை”  என்று ரஜினிகாந்த் பேசினார்.

மேலும் ரஜினி, “நான் அழகன் இல்லை. அறிவாளி இல்லை. ஆனாலும் தமிழ் மக்கள் எனக்கு பேராதரவு தந்து வருகிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்ததாக, “சோ இறந்த போது கூட பெரிய அளவில் நான் வருந்தவில்லை. காரணம்,  அந்த அளவிற்கு எனது மனதை தயார் படுத்தி வைத்திருந்தேன்.

ஆனால் அவர் இறந்த பின்னர் இங்கு நடக்கிற சில அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும் போது அவர் இல்லாததை நினைத்து மனசுக்கு  கஷ்டமாக இருக்கிறது” என்று ரஜினி பேசினார்.

அவரது இந்த பேச்சு, அரசியலுக்கு வருவதற்காகன அச்சாரம் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ரஜினி ரசிகர்கள், “1996ம் ஆண்டிலும் தமிழகத்தில் அசாதாரண சூழல்நிலை ஏற்பட்டது. அப்போது அரசியல் மாற்றம் குறித்து ரஜினி வெளிப்படையாக பேசினார். ஆனால், அவர் அரசியலுக்கு வரவில்லை.

ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதை அக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்கவில்லை. அக்கட்சி சார்பாக முதல்வராக பொறுப்பு வகிககும் ஓ.பி.எஸ்ஸுக்கும் தொண்டர்கள் ஆதரவு இல்லை.  சசிகலா மற்றும் மத்திய பாஜக அரசுக்கு இடையே ஓ.பி.எஸ். திண்டாடி வருவதாக ஒரு அபிப்பிராயம் மக்களிடையே நிலவுகிறது.

இன்னொருபுறம் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்.  அவர் தனது மகன் ஸ்டாலினை செயல் தலைவராக ஆக்கிவிட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.  இதனால்   தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக நலனுக்காக  ரஜினி அரசிலுக்கு வர நினைக்கிறார்.. இதைத்தான் அவரது நெருங்கிய நண்பர் சோவும் நீண்ட நாட்களாக சொல்லி வந்தார்.

ஆகவே “தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது” என்று ரஜினி சொல்லியிருப்பது,  அவரது அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்பமே” என்று ரஜினி ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

மேலும், தன்னை வருங்கால முதல்வரே என குறிப்பிட்டு போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததையும் குறித்தும் ரஜினி மறுத்துப்பேசவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆக, 1996ல் விட்டதை 2017ல் செய்யாவாரா ரஜினி என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.