சென்னை,
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்த சசிகலா இன்று முதல் வரும் 9ந்தேதி வரை மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவித்தார்.
அதன்படி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல் நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளரான சசிகலா சந்திப்பு நடைபெற்றது.
சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்தை வருவதை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பேனர்களால் வரவேற்பு அமைக்கப்பட்டிருந்தது. சசிகலாவை ஆதரிக்கும் தொண்டர்களும் தலைமை அலுவலகத்தில் குழுமியிருந்தனர்.
இன்றுகாலை சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த சசிகலாவுக்கு வழிநெடு கிலும் அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்து மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர்.
தலைமை கழகத்திற்குள் வந்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
முதற்கட்டமாக, வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இன்று மாலையில் திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற இருக்கிறது.