டெல்லி:
டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டுகளின் விபரங்களை இன்று இரவுக்குள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
புழக்கத்தில் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம தேதி அறிவித்தார். உடனடியாக இந்த அறிவிப்பு அமலுக்கு வந்தது. மக்கள் கையில் இருக்கும் இத்தகைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் டெபாசிட் செய்துவிட வேண்டும்.
தவறும்பட்சத்தில் அந்தந்த மாநிலத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உரிய விளக்க கடிதம் சமர்ப்பித்து செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையும் மார்ச் 31ம் தேதி வரை தான். அதன் பின்னர் இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அபராதம மட்டும் விதிக்கப்படும் என மத்திய அரசு மாற்றி அறிவித்தது. இதற்கு அவசர சட்டம் கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை அவரவர் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றோடு முடிவடைந்தது. இன்றைய வங்கி வேலை நேர முடிவில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களின் விபரத்தை உடனடியாக இ.மெயில் மூலம் தெரிவிக்க வேண்டும் என தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சகலங்கள் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதற்கு ஏற்ப ஒருங்கிணைந்த கணினி பண பரிமாற்ற நிர்வாக முறை என்ற ஐசிசிஓஎம்எஸ் திட்டம் இன்று இரவு 9 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இறுதி நாளில் வசூலாகும் அனைத்து பணத்தையும் நாளைக்குள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த பணம் வங்கியில் வைத்திருந்தால், அது வங்கியின் இருப்பு கணக்கில் வராது என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.