சவுதியில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக இளைஞர்
ரியாத்:
சவுதி அரேபியாவில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக இளைஞர் தன்னை காக்க இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரும் வீடியோ காட்சி, சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மேலபூங்குடி போஸ்ட் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் கலைவாணன்.
இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். வறுமையில் உழன்ற கலைவாணன் தனது மைத்துனர் மூலம் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். இவருடன் பெரியப்பா மகன் மற்றும் அண்ணன் மகனும் சவுதிக்கு சென்றனர்.
கார் டிரைவர் வேலைக்கு என்று அழைத்துச்செல்லப்பட்ட இவர்களுக்கு அங்கு ஆடு மேய்க்கும் பணியே தரப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த கலைவாணன், அடித்து, உதைத்து கட்டி வைக்கப்பட்டுள்ளார். இனி கலைவாணன் வார்த்தைகளிலேயே அந்த கொடுமைகளை நீங்களே படியுங்கள்:
“கார் டிரைவர் வேலைக்கு என்றுதான் சவுதிக்கு வந்தோம். விசாவிலும் அப்படித்தான் உள்ளது. ஆடு மேய்க்க முடியாது என கூறியதும், உரிமையாளர் அப்துல்லா என்னை அடித்து சங்கிலியில் கட்டி வைத்தார். மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் தரவில்லை. பசி தாங்க முடியாமல் கெஞ்சினேன். பிறகு, கூல்ட்ரிஸ்ஸும் பன்னும் அளித்தார்.
பிறகு உரிமையாளர் அப்துல்லா தனது பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இது, குவைத் செல்லும் வழியில் 25வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடமாகும். மூன்று மாதங்களாக இங்குதான் வேலை பார்க்கிறேன்.
சாப்பாடு சரியாக தருவதில்லை, உடலில் தெும்பும் இல்லை. ஒரு ஆட்டுக்குட்டி செத்துப்போய்விட்டது என்பதற்காக இரும்பு கம்பியால் எனது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்கள். அந்த வடு கூட அப்படியே உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் என்னை கொன்றுவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.
எனது மனைவி, குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. தயவு செய்து தமிழர்கள் யாராவது இதை தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது இந்திய பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று என்னை காப்பாற்றுங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்” இவ்வாறு குரல் தழுதழுக்க கூறுகிறார் கலைவாணன்.
இவரது பாஸ்போர்ட் எண் ‘கே.2726490’ என்ற தகவலையும், வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு அல்லது இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
[embedyt] http://www.youtube.com/watch?v=O_ciB7KZCmk[/embedyt]
Also read