சென்னை,
தனது வீட்டில் நடைபெற்ற ரெய்டு குறித்து முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதற்கு தமிழக பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ரெய்டு ஆளான தமிழக முன்னாள் கவர்னர் இன்று, வருமான வரித்துறை மீதும், மத்திய அரசும் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
மேலும், ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்குமா என்று மத்திய அரசை கடுமையாக சாடினார்.
அவருடைய குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
ராமமோகன் ராவின் பேட்டி, முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட பேட்டி. இதன் பின்புலத்தில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்லி அரசியல் அமைப்பு சட்டத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார். மேலும், தமிழகத்தில் அரசு செயலாளர் களுக்கும், கலெக்டர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிறார்.
குற்றம் செய்த ஒருவர் தனக்கு நிகராக மற்ற அதிகாரிகளையும் ஒப்பிட்டு பேசுவது அரசு நிர்வாகத் தையே அவமானப்படுத்துவதாகும்.
மேலும், இன்னும் நாதான் தலைமை செயலாளர் என்று சொல்லும் ராம மோகனராவுக்கு தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளராக பதவி வகித்த அரசு அதிகாரி ஒருவர், அரசியல்வாதி போல பேசியுள்ளார். அ.தி.மு.க, பா.ஜனதா என்று அரசியல் கட்சிகளை வம்புக்கு இழுக்கலாமா?
இதன்காரணமாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ராவ் அவமானப்படுத்தி விட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால், ராவின் இந்த செயலுக்கு கடுமையாக தண்டனை கொடுத்திருப்பார் என்றார்.
வருமான வரி சோதனையை அவர் அனுமதித்து இருக்க மாட்டார் என்று ராவ் சொல்லுவது ஜெயலலிதா வை களங்கப்படுத்துவதோடு தூண்டி விடும் விஷயங்க ளில் ஈடுபட்டுள்ளார்.
தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மறைந்த பிறகு அவரை அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும், ராவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பார்த்து அ.தி.மு.க வினரே சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டுள்ள ராமமோகனராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தனக்கு பரிகாரம் வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கலாம். ஆனால் தவறு செய்த தனக்கு துணையாக மற்றவர்களும் வர வேண்டும் என்று தூண்டி விடுகிறார்.
சி.ஆர்.பி.எப். எப்படி வரலாம் என்கிறார்? அதை கேட்க இவர் யார்? சி.ஆர். பி.எப் வரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது யார்? தவறான மனிதன் தனது தவறை மறைக்க தலைமை செயலகத்தையும் பயன்படுத்த முடியும் என்பது தெரியும்போது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இதனால் அரசுக்கும், நிர்வாகத்துக்கும் அவமானம் கிடையாது. இது தனிப்பட்ட அவருக்கு ஏற்பட்ட அவமானம். இதை நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் அரசுக்கு அவமானம்.
வருமான வரித்துறையின் சோதனைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் என்ன தொடர்பு? அது தனித்து இயங்கும் துறை. அவர்களுக்கு கிடைக்கும் தகவல் படி சோதனை நடத்துகிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள். சோதனை நடக்கும் போது வீட்டுச்சிறை மாதிரிதான் வைத்திருப்பார்கள். சும்மா சுதந்திரமாகவா அலைய விடுவார்கள்? யார் வீட்டில் ரெய்டு நடந்தாலும் இப்படித் தான் நடக்கும்.
இவ்வாறு பொன்ராதாகிருஷ்ணன் கூறினார்.
பா.ஜனதா எம்.பி. இல. கணேசன்:-
ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி நகை, பணம் போன்ற வற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நடத்தப்பட்டது தவறு என ராமமோகனராவ் கூறி உள்ளார். அவருக்கு அதை கூற தகுதியில்லை.
மேலும் முழுபங்கும் யாருக்கு சென்றது என அவர் சொன்னால், கருணை காட்டப்படலாம். பாவ விமோசனம் கிடைக்கும். அவர் மீது ஏற்கனவே பல புகார் எழுந்துள்ளது. அப்படி இருந்தும் அவர் எப்படி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது வியப்புக்குரியது. தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் சொல்வது மக்களிடம் எடுபடாது. அவரது பேச்சை மக்கள் நம்பமாட்டார்கள்.
மேலும் இந்த சோதனையை அரசியலாக பார்க்கக் கூடாது. சோதனையை சம்பவமாகத் தான் பார்க்க வேண்டும்.
மாநில பா.ஜனதா துணை தலைவர் வானதி சீனிவாசன்–
தமிழகத்தில் வித்தியாசமான காட்சிகள் நடக்கிறது. முச்சந்தியில் நின்று பொறுப்பில்லாத நபர் போல் ராம மோகனராவ் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. சவாலுக்கு சவால்விட முடியாது. ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.
இவ்வாறு கூறியுள்ளனர்.